அறுவை சிகிச்சை அறைக்குள் திடீரென புகுந்த பாம்பு: டாக்டர்கள் ஓட்டம்; நோயாளி திகைப்பு

கடந்த ஆண்டு நவம்பரில் இதே மருத்துவ கல்லூரியில் பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டதில் சிக்கி 18 குழந்தைகள் பலியான சோக சம்பவம் நடந்தது.;

Update:2025-09-18 19:27 IST

லக்னோ,

உத்தர பிரதேசத்தில் ஜான்சி மகாராணி லட்சுமி பாய் மருத்துவ கல்லூரியில் அறுவை சிகிச்சை ஒன்றை நடத்துவதற்கு ஏற்பாடாகி இருந்தது. அப்போது, திடீரென பாம்பு ஒன்று உள்ளே வந்துள்ளது. இதனால், டாக்டர்கள், நர்ஸ் உள்ளிட்ட மருத்துவ ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். நோயாளியை தனியாக விட்டு விட்டு அவர்கள் வெளியேறினர்.

இதுபற்றி உடனடியாக வன துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. பாம்பு பிடிக்கும் குழுவினர் அறுவை சிகிச்சை அறைக்கு வந்து, பாம்பை பிடித்து சென்று, வன பகுதியில் விட்டனர். இதன்பின்னரே, நோயாளி உள்ளிட்ட அனைவரும் நிம்மதி அடைந்தனர்.

அறுவை சிகிச்சை அறையின் பொறுப்பாளர் கனக் ஸ்ரீவஸ்தவா முதலில் அந்த பாம்பை பார்த்து மற்றவர்களிடம் கூறியுள்ளார். இதனை அறிந்து ஒட்டுமொத்த மருத்துவ கல்லூரியின் நிர்வாகமும் அதிர்ச்சி அடைந்தது. அறுவை சிகிச்சை நடைபெறும் இடத்தில், நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில், பாம்பு புகுந்தது, அலட்சியத்திற்கான விசயம் என நோயாளிகளின் உறவினர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து, மருத்துவ கல்லூரி நிர்வாகம் அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. மருத்துவ கல்லூரியை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் கண்காணிப்பு மேற்கொள்ள உத்தரவுகளை பிறப்பித்தது. கடந்த ஆண்டு நவம்பரில் இதே மருத்துவ கல்லூரியில் பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 18 குழந்தைகள் பலியான சோக சம்பவம் நடந்தது.

சமீபத்தில், ஆகஸ்டு 29-ந்தேதி தீ விபத்து ஏற்பட்டு, மருத்துவ கல்லூரியில் இருந்தவர்களிடையே அச்சம் தொற்றி கொண்டது. இந்நிலையில், பாம்பு புகுந்த சம்பவம் பாதுகாப்பு பற்றிய பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்