மக்கள் தொகை கணக்கெடுப்பை விரைவில் நடத்த வேண்டும் - சோனியா காந்தி

உணவுப் பாதுகாப்பு ஒரு சலுகை அல்ல, அது ஒரு அடிப்படை உரிமை என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.;

Update:2025-02-10 13:56 IST

புதுடெல்லி,

மாநிலங்களவையில் பூஜ்ஜிய நேர உரையில் பேசிய சோனியா காந்தி, மக்கள் தொகை கணக்கெடுப்பை விரைவில் முடிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக மேலும் அவர் பேசியதாவது,

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழ் பயனாளிகள் சமீபத்திய மக்கள் தொகை எண்ணிக்கையின்படி அல்ல, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அடையாளம் காணப்படுகிறார்கள்.

கடந்த 2013 செப்டம்பரில் யுபிஏ அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், நாட்டின் 140 கோடி மக்களுக்கு உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு முக்கிய முயற்சி. குறிப்பாக கோவிட்-19 நெருக்கடியின்போது லட்சக்கணக்கான பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களைப் பட்டினியிலிருந்து பாதுகாப்பதில் இந்த சட்டம் முக்கிய பங்கு வகித்தது.

தற்போது, உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அரசு ஒரு நபருக்கு மாதத்திற்கு 5 கிலோ இலவச உணவு தானியங்களை வழங்குகிறது.

சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதல்முறையாக, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகத் தாமதமாகியுள்ளது. இது முதலில் 2021-இல் நடத்தத் திட்டமிடப்பட்டது, ஆனால் மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும் என்பது குறித்து இதுவரை எந்தவித தெளிவுமில்லை.

பட்ஜெட் ஒதுக்கீடு நடந்துமுடிந்த நிலையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்தாண்டு நடத்தப்பட வாய்ப்பில்லை என்பதைக் காட்டுகின்றன. இதனால் சுமார் 14 கோடி தகுதியுள்ள இந்தியர்கள் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவர்களின் உரிமையான சலுகைகளை இழக்கின்றனர்.

மக்கள் தொகை கணக்கெடுப்பை விரைவில் முடிப்பதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளிப்பது அவசியம், மேலும் தகுதியான அனைத்து நபர்களும் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட சலுகைகளைப் பெறுவதை உறுதி செய்வது அவசியம். உணவுப் பாதுகாப்பு ஒரு சலுகை அல்ல. அது ஒரு அடிப்படை உரிமை என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்