செந்தில் பாலாஜி கோரிக்கையை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்டு
பண மோசடி வழக்கில் செந்தில் பாலாஜி கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்தது.;
புதுடெல்லி,
போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இதற்கு இடைக்காலத் தடை கோரி சேலத்தைச் சேர்ந்த தர்மராஜ் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் பாலாஜி ஸ்ரீநிவாசன் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, சென்னை ஐகோர்ட்டு உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தது. மேலும் அதில் செந்தில்பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான சில கருத்துக்களும் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து, செந்தில்பாலாஜி சார்பில், வக்கீல் விஷால் பிரசாத் தாக்கல் செய்துள்ள மனுவில், சுப்ரீம் கோர்ட்டு கூறிய தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளாால், தவறான எண்ணம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் நியாயமான விசாரணை என்ற அடிப்படை உரிமையையும் பாதிக்கப்படுவதாக உள்ளன. எனவே, தீர்ப்பில் உள்ள 45,46 பத்திகளை நீக்கி உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சூர்யகாந்த், ஜோய்மால்யா பக்ஷி ஆகியோர், இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ள தீர்ப்பின் ஒரு சொல்லைக் கூட நீக்க மாட்டோம். அதே சமயம் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள கருத்துகளை, கருத்தில் கொள்ளாமல் சிறப்புக் கோர்ட்டு விசாரணையை நடத்த வேண்டும் என குறிப்பிட்டு மனுவை தள்ளுபடி செய்தனர். பின்னர் இது தொடர்பான விசாரணையை வருகிற 13-ந்தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.