ஏர் இந்தியா விமான விபத்து குறித்து பகிர்ந்த டாடா குழும தலைவர் சந்திரசேகரன்

விமான விபத்தில் குடும்பங்களை இழந்தவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும், எந்த வகையில் வேண்டுமானாலும், உதவி செய்வேன் என்று டாடா குழுமத்தலைவர் சந்திரசேகர் கூறியுள்ளார்.;

Update:2025-06-19 09:11 IST

புதுடெல்லி,

கடந்த 12-ந் தேதி, குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. அதில், விமானத்தில் பயணம் செய்த 241 பேரும், விபத்து பகுதியில் இருந்த 29 பேரும் பலியானார்கள்.அவர்களின் உடல்கள் தீயில் கருகியும், சிதைந்தும் அடையாளம் தெரியாத அளவுக்கு இருந்ததால், டி.என்.ஏ. சோதனை மூலம் உடல்களை அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்பட்டது.

உடல்களில் இருந்து எடுக்கப்பட்ட டி.என்.ஏ. மாதிரியும், குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட டி.என்.ஏ. மாதிரியும் ஒப்பிட்டு பார்த்து சோதனை செய்யப்பட்டது.நேற்று காலை வரை, 208 பேர் உடல்களின் டி.என்.ஏ. மாதிரிகள் பொருந்தி இருந்ததால், அந்த உடல்கள் அடையாளம் காணப்பட்டன. அவற்றில், 170 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

ஒப்படைக்கப்பட்ட உடல்களில், 4 போர்ச்சுக்கீசியர்களின் உடல்களும், 30 இங்கிலாந்து நாட்டினரின் உடல்களும், ஒரு கனடா நாட்டை சேர்ந்தவரின் உடலும் அடங்கும். டி.என்.ஏ. சோதனை மூலம் உடல்களை அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்தநிலையில், டாடா குழும தலைவர் சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

விமான விபத்து குறித்து கேள்விப்பட்டதும் அதிர்ந்துவிட்டேன். அதை புரிந்துகொள்ளவே எனக்கு சில நிமிடங்கள் ஆகின.விமானத்தில் பயணித்தவர்கள் உயிர் பிழைக்க வேண்டும் என வேண்டிக்கொண்டேன். 'கடவுளே என்ன இது?' எப்படியாவது அனைவரும் பிழைத்துவிட வேண்டும் என்பதுதான் எனது எண்ணமாக இருந்தது. அதன்பிறகு என்னை நானே தேற்றிக்கொண்டு உடனடியாக விமான நிலையம் புறப்பட்டு விட்டேன்.

இதயத்தை நொறுக்கும் விஷயம் இது. விமான விபத்தில் இழப்பை சந்தித்தவர்களுக்கு ஆறுதல் சொல்வது மிகவும் கடினமான ஒன்று. நாம் என்ன சொன்னாலும் அவர்களின் இழப்பை ஈடு செய்ய முடியாது. அவர்களின் துக்கத்தில் நானும் பங்கேற்கிறேன்.குடும்பங்களை இழந்தவர்களுக்கு நான் வாழ்நாள் முழுவதும் துணை நிற்பேன். அவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும், எந்த வகையில் வேண்டுமானாலும், உதவி செய்வேன். விமான விபத்திற்கு எஞ்சின் கோளாறு காரணமில்லை. அனுபவம் வாய்ந்த விமானிகளே விமானத்தை இயக்கினர். முதற்கட்ட விசாரணை முடிவு வரும்வரை, விபத்திற்கான முழுக்காரணம் குறித்து எந்த முடிவுக்கும் வர இயலாது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்