‘முப்படைகளின் திறன்கள் ஒருங்கிணைக்கப்படும்’ - ராணுவ தளபதி உபேந்திர திவேதி
முப்படைகளின் திறன்களை ஒருங்கிணைப்பது குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்பட வேண்டும் என உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார்.;
புதுடெல்லி,
டெல்லியில் உள்ள மானக்ஷா மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான புத்தகத்தை இந்திய ராணுவ தளபதி உபேந்திர திவேதி வெளியிட்டார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;-
“நாம் ஒரு போரில் ஈடுபடும்போது, ராணுவம் தனியாக போராடுவதில்லை. நம்மிடம் எல்லை பாதுகாப்புப் படை மற்றும் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படைகள் உள்ளன. மேலும் முப்படைகள், பாதுகாப்பு சைபர் நிறுவனங்கள், பாதுகாப்பு விண்வெளி நிறுவனங்கள் உள்ளன.
அது தவிர, இஸ்ரோ, சிவில் பாதுகாப்பு, சிவில் விமானப் போக்குவரத்து, ரெயில்வே, என்.சி.சி., மாநில மற்றும் மத்திய நிர்வாகங்கள் போன்ற நிறுவனங்கள் உள்ளன. இவ்வளவு நிறுவனங்களை நாம் சமாளிக்க வேண்டியிருந்தால், ஒருங்கிணைப்பு என்பது அவசியம்.
ஏனென்றால் கட்டளையில் ஒற்றுமை என்பது மிகவும் முக்கியமானது. செயல்படுத்தலில் ஒருங்கிணைப்பை அடைவதற்கு ஒரு தளபதி தேவை. எனவே, முப்படைகளின் திறன்கள் நிச்சயம் ஒருங்கிணைக்கப்படும். ஆனால் அதற்கு எவ்வளவு கால அவகாசம் தேவை என்பதை நாம் பார்க்க வேண்டும். இது குறித்து விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட வேண்டும்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.