இரு பெண்கள் மாயம்... காதலனின் வாக்குமூலத்தை கேட்டு அதிர்ந்த போலீசார்

போலீசார் நடத்திய விசாரணையில், இளைஞர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.;

Update:2025-09-09 13:06 IST

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதி மாவட்டத்தை சேர்ந்த இரண்டு இளம்பெண்கள் திடீரென காணாமல் போனார்கள். அவர்களது உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் இரண்டு பெண்களையும் தேடி வந்தனர். அப்போது காணாமல் போன ஒரு பெண்ணின் காதலனான ஸ்ரீகாந்த் சவுத்ரி என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அந்த இளைஞர் கூறிய தகவல்களை கேட்டு அதிர்ச்சியடைந்தனர்.

அதாவது, ஸ்ரீகாந்த் சவுத்ரி, அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை (காணாமல் போன பெண்களில் ஒருவர்) காதலித்துள்ளார். இருவரும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் அந்த பெண் வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்துள்ளார். இது ஸ்ரீகாந்த் சவுத்ரிக்கு தெரிய வரவே, இது குறித்து தனது காதலியிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்குள்ளும் இதகராறு ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தன்று, ஸ்ரீகாந்த் சவுத்ரி, பேசுவதற்காக தனது காதலியை காட்டுப்பகுதிக்கு அழைத்துள்ளார். அந்த பெண்ணும், தனது தோழி ஒருவருடன் அந்த காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். காதலி மீது கோபத்தில் இருந்த ஸ்ரீகாந்த் சவுத்ரி, காதலியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். அப்போது அதனை நேரில் கண்ட தோழியால் தனக்கு பிரச்சினை ஏற்படும் என கருதிய ஸ்ரீகாந்த், அந்த பெண்ணையும் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார். பின்னர் இருவரின் உடல்களையும் மறைத்து வைத்து, ஏதும் தெரியாதது போல் வெளியில் சுற்றித்திரிந்துள்ளார்.

போலீசார் நடத்திய விசாரணையில், குற்றத்தை ஒப்புக்கொண்டார். அத்துடன், இரு பெண்களின் உடல்களை மறைத்து வைத்திருந்த இடத்தை போலீசாரிடம் காட்டினார். இதையடுத்து இரு பெண்களின் உடல்களையும் மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஸ்ரீகாந்தை கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்