உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி விரைவில் இந்தியா வருகிறார்
உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி விரைவில் இந்தியா வருகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.;
புதுடெல்லி,
ரஷியா-உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் போர் சர்வதேச சமூகத்தை கவலை கொள்ளச்செய்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தீவிரமாக முயன்று வருகிறார். எனவே ரஷிய அதிபர் புதினை கடந்த 15-ந்தேதி டிரம்ப் சந்தித்து இது குறித்து பேசினார்.
அமெரிக்காவின் அலாஸ்காவில் நடந்த இந்த சந்திப்பு சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் டிரம்ப்-புதின் இடையே நடந்த இந்த பேச்சுவார்த்தையில் உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து முடிவும் எட்டப்படவில்லை. அதைத் தொடர்ந்து டிரம்புடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை நடத்தினார். ”ஆனால், போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரையில், எதுவும் சொல்ல முடியாது” என்று அமெரிக்க அதிபர் கூறியுனார்.
டிரம்ப்-புதின் இடையே நடந்த இந்த சந்திப்பை இந்தியா வரவேற்று இருந்தது. அமைதியை நிலைநாட்டுவதில் அவர்களின் தலைமை மிகவும் பாராட்டத்தக்கது என்றும் கூறியிருந்தது. இதனையடுத்து கடந்த 18-ம் தேதி பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய ரஷிய அதிபர் புதின், அலாஸ்காவில் டிரம்புடன் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து விவரித்தார். மேலும் ரஷியா-உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்று புதினிடம் பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி விரைவில் இந்தியா வர உள்ளதாக இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் போலிஷ்சுக் தெரிவித்துள்ளார். ஜெலென்ஸ்கியின் பயணத் தேதியை இறுதி செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியா வரும் உக்ரைன் அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு நடத்துவார் என்றும் அப்போது போர் நிலவரம், போரை நிறுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்துவார்கள் என்றும் போலிஷ்சுக் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் அதிபரின் இந்திய பயணம் இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் என்று போலிஷ்சுக் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ரஷியா மற்றும் உக்ரைனுக்கு பயணம் செய்த பிரதமர் மோடி, பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு இரு நாட்டு தலைவர்களிடமும் வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.