ரூ.24,634 கோடி மதிப்பிலான 4 ரெயில்வே திட்டங்களுக்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல்

4 திட்டங்களும் மராட்டியம், மத்திய பிரதேசம், குஜராத் மற்றும் சத்தீஷ்கார் மாநிலங்களின் 18 மாவட்டங்களை உள்ளடக்கியதாகும்.;

Update:2025-10-08 05:51 IST

புதுடெல்லி,

ரெயில்வே அமைச்சகத்தின் ரூ.24,634 கோடி மதிப்பிலான 4 திட்டங்களுக்கு பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மந்திரி சபை குழு நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்புதலின்படி, மராட்டிய மாநிலத்தில் வார்தா பூஷாவல் இடையே 3-வது, 4-வது பாதை 314 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்படுகிறது.

மராட்டியம் மற்றும் சத்தீஷ்கார் மாநிலங்களில் கோண்டியா டோன்கர்கர் இடையே 4-வது பாதை 84 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்படுகிறது. குஜராத் மற்றும் மத்தியபிரதேச மாநிலங்களில் வதோதரா ரட்ளம் இடையே 3-வது, 4-வது பாதை பணிகள் 259 கி.மீ. நீளத்துக்கு நடைபெற உள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் இடார்சி போபால் பினா இடையே 4-வது பாதை 237 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்படுகிறது.

இந்த 4 திட்டங்களும் மராட்டியம், மத்திய பிரதேசம், குஜராத் மற்றும் சத்தீஷ்கார் மாநிலங்களின் 18 மாவட்டங்களை உள்ளடக்கியதாகும். இதன் மூலம் இந்திய ரெயில்வேயின் தற்போதைய கட்டமைப்பு சுமார் 894 கிலோமீட்டர் அதிகரிக்கும். ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள இந்த பல தட திட்டம் சுமார் 85.84 லட்சம் மக்கள் தொகை கொண்ட மற்றும் 2 முன்னோடி மாவட்டங்கள் (விதிஷா, ராஜ்நந்த்கான்) இடம்பெற்றுள்ள சுமார் 3,633 கிராமங்களுக்கு போக்குவரத்தை மேம்படுத்தும்.

நாடு முழுவதும் உள்ள சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் சாஞ்சி, சத்பூரா புலிகள் காப்பகம், பீம்பேட்கா பாறை, ஹசாரா அருவி, நவேகான் தேசியப்பூங்கா போன்ற முக்கிய இடங்களுக்கு இத்திட்டத்தின் மூலம் ரெயில் போக்குவரத்து வசதி ஏற்படும்.

நிலக்கரி, பெட்டகம், சிமெண்டு, உணவு தானியம், இரும்பு போன்ற பொருட்களை அனுப்புவதற்கான முக்கிய வழித்தடமாக இது உள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு கூடுதலாக 7.8 கோடி டன் சரக்குகளை அனுப்ப முடியும். இந்த தகவல்களை மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் நேற்று பத்திரிகையாளர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்