உ.பி.: தேடப்படும் குற்றவாளியை சுற்றி வளைத்து... பெண் போலீஸ் படையின் முதல் என்கவுன்ட்டர்

ஜிதேந்திராவை பெண் போலீசார் அடங்கிய தனிப்படை ஒன்று நேற்றிரவு என்கவுன்ட்டர் செய்து பிடித்துள்ளது.;

Update:2025-09-24 09:07 IST

காசியாபாத்,

உத்தர பிரதேசத்தின் காசியாபாத் நகரில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் ஜிதேந்திரா (வயது 22). செயின் பறிப்பு, கொள்ளை மற்றும் திருட்டு உள்பட பல்வேறு வழக்குகள் ஜிதேந்திராவுக்கு எதிராக பதிவாகி உள்ளன. அவரை பிடிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் பலனில்லை.

போலீசாரிடம் சிக்காமல் தொடர்ந்து தப்பித்து வந்துள்ளார். இதனை அடுத்து, தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு ஜிதேந்திராவை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

இந்நிலையில், ஜிதேந்திராவை பெண் போலீசார் அடங்கிய தனிப்படை ஒன்று நேற்றிரவு என்கவுன்ட்டர் செய்து பிடித்துள்ளது. பெண் போலீஸ் படையின் முதல் என்கவுன்ட்டர் சம்பவம் இதுவாகும்.

அவர்கள் நேற்றிரவு சோதனை சாவடி ஒன்றில் ரோந்து மற்றும் வாகன சோதனை பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, பைக்கில் வந்த ஜிதேந்திரா, போலீசாரை கண்டதும் தப்பியோடும் முயற்சியில் ஈடுபட்டார். அவரை போலீசார் நிற்க கூறியும் கேட்காமல் பைக்கை ஓட்டி சென்றான். அப்போது, பைக்கில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

சரண் அடையும்படி போலீசார் கூறினர். இதனால் ஆத்திரமடைந்த ஜிதேந்திரா துப்பாக்கியால் போலீசார் படையை நோக்கி சுட்டுள்ளார். பதிலுக்கு பெண் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், ஜிதேந்திராவுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதன்பின்னர் அவரை பெண் போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.

இதுபற்றி மூத்த காவல் கதிகாரி உபாசனா பாண்டே கூறும்போது, விசாரணையில் டெல்லி-என்.சி.ஆர். பகுதியில் பைக், ஸ்கூட்டர்கள் திருட்டு, மொபைல் போன்கள் மற்றும் பிற பொருட்களை கொள்ளையடித்த விசயங்களையும் ஒப்பு கொண்டார்.

கைத்துப்பாக்கி மற்றும் ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. ஒரு மொபைல் போன் மற்றும் டேப்லெட் ஒன்றும் கைப்பற்றப்பட்டது. அவற்றை கடந்த ஞாயிற்றுக்கிழமை திருடி வந்ததும், ஸ்கூட்டரை டெல்லியில் கடந்த ஆண்டு திருடியதும் தெரிய வந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்