கோடரியால் தாக்கி பெண்ணை கொன்றது ஏன்..? - கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம்
கோடரியால் தாக்கி பெண்ணை கொன்றது ஏன்? என்பது குறித்து கைதான கள்ளக்காதலன் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்து உள்ளார்.;
பாலக்காடு,
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அருகே ஆஞ்சக்கொம்பு பகுதியை சேர்ந்தவர் வள்ளியம்மா (வயது 45). பழங்குடியினரான இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். அவரது கணவர் இறந்து விட்டார். இதற்கிடையே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வள்ளியம்மா மாயமானார். அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து புதூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் வள்ளியம்மாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த பழனி (52) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது கள்ளக்காதலாக மாறியது. பின்னர் 2 பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். மேலும் பழனி வள்ளியம்மாவை கொன்று வனப்பகுதியில் குழி தோண்டி புதைத்தது தெரியவந்தது. பின்னர் பழனியை போலீசார் கைது செய்து, வனப்பகுதிக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
அங்கு புதைக்கப்பட்ட வள்ளியம்மா உடலை போலீசார், வனத்துறையினர் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எதற்காக இந்த கொலை நடந்தது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் வள்ளியம்மாவும், பழனியும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். பின்னர் வள்ளியம்மா வேறொருவருடன் பழகியதாக சந்தேகித்த பழனி, அவரை கொலை செய்ய திட்டமிட்டு உள்ளார்.
சம்பவத்தன்று வனப்பகுதியில் விறகு சேகரித்து கொண்டிருந்த போது, வள்ளியம்மாவை கோடரியால் தலையில் அடித்து கொலை செய்தார். பின்னர் பழனி வனப்பகுதியில் குழி தோண்டி உடலை புதைத்தது தெரியவந்தது. இதனை பழனி போலீஸ் விசாரணையில் ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளார். இந்தநிலையில் பிரேத பரிசோதனை அறிக்கை முடிவில், தலையில் ஏற்பட்ட காயத்தால் வள்ளியம்மா இறந்தது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கு குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.