எறும்புகளை கண்டு பயம்; இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்த சோகம்
அந்த பெண் தூய்மை செய்யும்போது எறும்புகளை பார்த்து இருப்பார். அந்த பயத்தில் தற்கொலை முடிவை எடுத்திருக்க கூடும் என போலீசார் கூறினர்.;
ஐதராபாத்,
தெலுங்கானாவின் சங்காரெட்டி மாவட்டத்தில் வசித்து வந்த 25 வயது பெண்ணுக்கு 2022-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவருக்கு 3 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில், அவர் நேற்று முன்தினம் மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு எறும்புகளே காரணம் என கூறப்படுகிறது. எறும்புகள் மீதுள்ள பயம் மிர்மிகோபோபியா என கூறப்படுகிறது.
இதுபற்றி போலீசார் கூறும்போது, சம்பவ பகுதியில் கிடைத்த தற்கொலை குறிப்பில், மன்னித்து விடுங்கள் ஸ்ரீ. இந்த எறும்புகளோடு என்னால் வாழ முடியாது. மகளை நன்றாக கவனித்து கொள்ளுங்கள் என தெரிவித்து உள்ளார்.
அவர் சம்பவத்தன்று, மகளை உறவினர் வீட்டில் விட்டிருக்கிறார். வீட்டை சுத்தம் செய்து விட்டு மகளை திரும்ப அழைத்து கொள்கிறேன் என கூறி சென்றார். காலையில் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிய கணவர், பூட்டியிருந்த வீட்டு கதவை அண்டை வீட்டுக்காரர்களின் உதவியுடன் உடைத்து உள்ளே சென்று பார்த்து அதிர்ச்சியடைந்து உள்ளார்.
அவருடைய மனைவி தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். தொடர்ந்து போலீசார் கூறும்போது, அந்த பெண் தூய்மை செய்யும்போது எறும்புகளை பார்த்து இருப்பார். அந்த பயத்தில் தற்கொலை முடிவை எடுத்திருக்க கூடும் என போலீசார் கூறினர்.