3 நாட்களுக்கு இயல்பைவிட வெப்பம் அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுவடைந்திருக்கிறது.

Update: 2024-05-26 00:01 GMT

சென்னை,

தமிழ்நாட்டில் கோடை மழை பரவலாக பெய்ததால் கடந்த 2 வாரங்களாக வெயிலின் தாக்கம் குறைந்து காணப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. நேற்று முன்தினமும் சில இடங்களில் மழை பதிவாகியிருந்தது.

அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் மைலாடியில் 10 செ.மீ. மழை பெய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 31-ந்தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.

இதற்கிடையில் வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுவடைந்திருக்கிறது. இதற்கு ராமெல் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இது வடக்கு திசையில் நகர்ந்து இன்று தீவிர புயலாக வலுவடையக் கூடும் எனவும், நள்ளிரவு வங்காள தேசத்தில் உள்ள கேப்புப் பாராவுக்கும், மேற்கு வங்காளம் சாகர் தீவுக்கும் இடையே கரையை கடக்கக் கூடும் எனவும், புயல் கரையை கடக்கும் போது தரைக்காற்று மணிக்கு 110-120 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 135 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.

இந்த புயலின் தாக்கத்தால் தமிழ்நாட்டுக்கு மழைக்கான வாய்ப்பு குறைவு என்றும், வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கவே வாய்ப்பு இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பத்தை பொறுத்தவரையில், தமிழ்நாட்டில் அனேக இடங்களில் இன்று இயல்பையொட்டியும், நாளை (திங்கட்கிழமை) முதல் 29-ந்தேதி வரை 3 நாட்களுக்கு வெப்பம் இயல்பைவிட அதிகரித்தும் இருக்கும் என ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

குமரிக்கடல், மன்னார் வளைகுடா, அதனையொட்டிய தென் மாவட்ட கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 கி.மீ. முதல் 65 கி.மீ. வரையிலான வேகத்தில் இன்றும், நாளையும் வீசக்கூடும் எனவும், வடக்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 75 கி.மீ. முதல் 130 கி.மீ. வரையிலான வேகத்தில் இன்று வீசக்கூடும் எனவும், இதனால் இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டு இருக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்