இலங்கையில் சிக்கி தவிக்கும் 150 தமிழர்கள்; அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்த மு.க. ஸ்டாலின்

இலங்கை விமான நிலையத்தில் சிக்கி தவிக்கும் பயணிகளுக்கு தேவையான உதவியை, தக்க நேரத்தில் வழங்கும்படியும் தமிழக அரசு கேட்டு கொண்டுள்ளது.;

Update:2025-11-29 13:40 IST

சென்னை,

துபாயில் இருந்து 150 தமிழர்கள் உள்ளிட்ட 300 பயணிகளுடன் விமானம் ஒன்று இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்தது. இலங்கை வழியே இந்தியா வர இருந்த விமானம், இலங்கையின் கொழும்பு நகரில் உள்ள பண்டாரநாயகே சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தரையிறங்கியது. எனினும், வங்க கடல் மற்றும் இலங்கையை ஒட்டியுள்ள பகுதிகளில் உருவாகி உள்ள டிட்வா புயல் எதிரொலியாக கனமழை பெய்து வருகிறது.

இதனால், இலங்கையில் விமானம் மற்றும் ரெயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், இந்தியர்களை ஏற்றி வந்த விமானம் புறப்படுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், 150 தமிழர்கள் உள்ளிட்ட 300 பயணிகளும் கடந்த 3 நாட்களாக கொழும்பு விமான நிலையத்திலேயே சிக்கி தவித்து வருகின்றனர்.

அவர்களுக்கு போதிய உணவு, தண்ணீர் மற்றும் அடிப்படை வசதிகள் எதுவும் தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. எங்களை மீட்டு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என இந்திய பயணிகள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டு உள்ளது.

இந்நிலையில், கொழும்புவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடன் ஒத்துழைக்கும்படி பொது சுகாதார துறை செயலாளருக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்து உள்ளார். இலங்கையில் சிக்கி தவிக்கும் தமிழர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவது உறுதி செய்யப்படுவதற்கான பணிகளில், இந்திய தூதரக அதிகாரிகளுடன் இணைந்து, தமிழக அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

விமான நிலையத்தில் சிக்கி தவிக்கும் பயணிகளுக்கு தேவையான உதவியை, தக்க நேரத்தில் வழங்கும்படியும் தமிழக அரசு கேட்டு கொண்டுள்ளது. இலங்கையில், பேரிடரை முன்னிட்டு, இந்தியா சார்பில் ஆபரேசன் சாகர்பந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதன்படி, மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண உதவியை இந்தியா வழங்குகிறது. ஐ.என்.எஸ். விக்ராந்த் மற்றும் ஐ.என்.எஸ். உதயகிரி ஆகிய கப்பல்கள் மூலம் கொழும்புவில் 4 டன் நிவாரண உதவி பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளன.

இதனை தொடர்ந்து, இந்திய விமான படையின் சி-130 ஜே விமானத்தில் இன்று காலை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. அதில், கூடாரங்கள், தார்ப்பாய்கள், போர்வைகள், சுகாதார நலன் சார்ந்த பொருட்கள் மற்றும் உடனடியாக சாப்பிட கூடிய உணவு பொருட்கள் உள்ளிட்ட 12 டன் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. இதனை மத்திய மந்திரி ஜெய்சங்கர் எக்ஸ் பதிவில் பகிர்ந்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்