ஆன்லைன் டிரேடிங் மூலம் ரூ.1.5 லட்சம் மோசடி: 2 பேர் கைது
ஆன்லைன் டிரேடிங் போன்ற போலியான விளம்பரங்களை தவிர்த்து சைபர் குற்றங்களிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் தெரிவித்துள்ளார்.;
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், சமூக ஊடகமான முகநூல் (Facebook) பக்கத்தில் அறிமுகமான நபர் ஆன்லைன் டிரேடிங் தொடர்பான புலனம் (Whatsapp) லிங்க் அனுப்பியதில், அவர் அந்த லிங்க்-ஐ கிளிக் செய்ததில், இணையதளத்தில் ஆன்லைன் டிரேடிங் தொடர்பான பகுதி நேர வேலைவாய்ப்பை வழங்கினார். அதற்குப்பின்னர், வாட்ஸ்அப் எண்கள் மூலமாக தொடர்ந்து வழிகாட்டல் வழங்கப்பட்டு, அதிக வருமானம் கிடைக்கும் என உறுதியளித்து ஆன்லைன் டிரேடிங் நடவடிக்கைகளில் ஈடுபடச் சொன்னார்கள். இவ்வாறு கூறியதை நம்பி மொத்தமாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் முதலீடு செய்தார்.
ஆனால், மேலே குறிப்பிட்ட இணையதளத்திலிருந்து முதலீட்டுத்தொகையை திரும்பப் பெற முயற்சித்தபோது, பணத்தை திரும்பபெற இயலவில்லை. இதுகுறித்து சந்தேகம் எழுந்தபோது, சம்பந்தப்பட்ட நபர்கள் கூடுதல் பணம் கேட்டனர். பின்னர் தான் மோசடியானது உண்மையென்று புரிந்ததும், உரிய சட்ட நடவடிக்கையை NCRP (National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்துள்ளார்.
மேற்சொன்ன புகாரின் அடிப்படையில் மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட்ஜான், தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு ஏ.டி.எஸ்.பி. சகாயஜோஸ் மேற்பார்வையில், சைபர் குற்றப் பிரிவு போலீசார் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டு மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட செல்போன்களை கைப்பற்றியதோடு, வங்கி கணக்குகளை கண்டறிந்து அவற்றை முடக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டு, இது தொடர்பாக 2 பேரை சைபர் குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுபோன்று பகுதி நேர வேலை, ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம், ஸ்டார் ரேட்டிங் கொடுப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று இணையதளம், பேஸ்புக், வாட்ஸ்ஆப், டெலிகிராம் போன்றவற்றின் மூலம் வரும் போலியான விளம்பரங்களை நம்பி அதில் வரும் லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என்றும், இளைஞர்கள், பெண்கள் ஆகியோர் இதுபோன்ற போலியான விளம்பரங்களை தவிர்த்து சைபர் குற்றங்களிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளார்.