2026 தேர்தலில் திமுக - தவெக இடையேதான் போட்டி - டிடிவி தினகரன்
எடப்பாடி பழனிசாமியுடன் நான் சேர்வதற்கான வாய்ப்பே இல்லை என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.;
கோப்புப்படம்
சென்னையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை தேர்தலுக்கு பிறகே நடத்த வேண்டும். சிறப்பு தீவிர திருத்த படிவத்தில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதால் தள்ளிப்போட வேண்டும்; சாமானிய மக்களுக்கு SIR படிவத்தை பூர்த்தி செய்வதில் சிரமம் ஏற்படும்.
என்றுமே டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமிக்கு சிம்ம சொப்பனம்தான். துரோகத்தை வீழ்த்தாமல் யார் தடுத்தாலும் நான் ஓயமாட்டேன். பன்னீர்செல்வம் துரோகம் செய்தார் என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். யார் துரோகம் செய்தார்கள் என்பது உலகத்திற்கே தெரியும். அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்று இல்லாமல், கட்சியின் பொதுச்செயலாளராக தான் இருக்க வேண்டும் என்று சுயநலத்தோடு எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார். எடப்பாடி பழனிசாமியுடன் நான் சேர்வதற்கான வாய்ப்பே இல்லை.
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வண்டவாளங்களின் விவரங்கள் அடங்கிய கோப்புகள் போயஸ் கார்டன் இல்லத்தில் தான் இருந்தன. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அந்த கோப்புகளை படித்து பார்த்து நானும், மருத்துவர் வெங்கடேசும் கிழித்து எரித்தோம். கோடநாட்டில் தேடப்பட்ட அனைத்து ஆதாரங்களும் போயஸ் கார்டனில் தான் இருந்தன. அந்த ஆதாரங்களை தேடிதான் கோடநாட்டில் கொலைகள் நடந்தன.
விஜய்யின் வருகையால் 2026 தேர்தலில் அதிமுக 3-வது இடத்திற்கு தள்ளப்படும். மேலும் தேர்தலில் திமுக கூட்டணிக்கும், தவெக கூட்டணிக்கும் இடையேதான் போட்டி. தவெகவுடன் கூட்டணி வைப்பதற்காக நான் சொல்லவில்லை. யதார்த்தமாக, சாதாரண குடிமகனாக பதில் சொல்கிறேன். விஜய் தலைமையில் சரியான கூட்டணி அமைந்தால் கடுமையான போட்டி நிலவும்.
கூட்டணி குறித்து சில கட்சிகள் என்னை அணுகினார்கள். கூட்டணி குறித்து நான் இன்னும் முடிவெடுக்கவில்லை. வெற்றி கட்சியுடன் தான் எனது கூட்டணி. இவ்வாறு அவர் கூறினார்.