23-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி: ரூ.11.8 கோடியை இழந்த சாப்ட்வேர் என்ஜினீயர்
பெங்களூருவைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் ஒருவர் "டிஜிட்டல் அரெஸ்ட்" மோசடியாளர்களிடம் ரூ.11.8 கோடியை இழந்துள்ளார். பண மோசடி செய்வதற்காக வங்கிக் கணக்குகளைத் திறக்க அவரது ஆதார் அட்டை தவறாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும், இதற்காக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டிருப்பதாகவும் போலீஸ் அதிகாரிகள் பேசுவதைப் போன்று பேசி இந்த மோசடியை அரங்கேற்றி உள்ளனர். நவம்பர் 25 முதல் டிசம்பர் 12 வரை இந்த மோசடி நடந்துள்ளது.
தமிழ்நாட்டுப் பள்ளிகளில் தற்போதைய தேர்ச்சி முறையே தொடரும் - அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்
வினோத் காம்ப்ளி மருத்துவமனையில் அனுமதி: மூளையில் ரத்த உறைவு
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத்காம்ப்ளி (வயது 52), மராட்டிய மாநிலம் தானேயில் உள்ள தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆரம்பகட்ட பரிசோதனையில், அவருக்கு கடுமையான உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீர் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. அவரது மூளையில் ரத்தம் உறைந்திருப்பதும் தெரியவந்துள்ளது. எனவே, அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் வழங்கிய புஷ்பா-2 தயாரிப்பாளர்
புஷ்பா-2 படத்தை பார்க்க வந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு தயாரிப்பாளர் 50 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.
இறந்துபோன பெண்ணின் 8 வயது மகனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறான். தயாரிப்பாளர் நவீன் யெர்னேனி இன்று அந்த மருத்துவமனைக்கு சென்று சிறுவனின் தந்தையிடம் 50 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும்
தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியிருப்பதாவது:-
நமது அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக்காக மற்றுமொரு மகத்தான அரசாணையை முதலமைச்சர் இன்று வெளியிட்டுள்ளார்.
“அரசுப் பள்ளியில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று நம் நாட்டில் செயல்பட்டு வரும் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அனைத்து மாணவர்களின் கல்விச் செலவினை அரசே முழுமையாக ஏற்கும். மேலும், அயல்நாட்டு உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி உதவித் தொகை பெற்றுச் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் முதல் பயணத் தொகையை முழுமையாக இவ்வரசே ஏற்றுக்கொள்ளும். இத்திட்டத்திற்காக ஆண்டுதோறும் ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்" என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
நம் தமிழ்நாட்டு மாணவர்களை உலகம் போற்றும் அறிஞர்களாக உருவாக்க, இந்தியாவிற்கே முன்மாதிரியான பல புதிய திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு மாணவர்கள், ஆசிரியப் பெருமக்கள் மற்றும் பெற்றோர்களின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அமைச்சர் கூறி உள்ளார்.
மாவோயிஸ்ட் மூத்த தலைவர் கைது
சத்தீஷ்கார் மாநிலத்தில் காவல்துறையால் தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் மூத்த தலைவர் பிரபாகர் ராவ் கைது செய்யப்பட்டார். தடை செய்யப்பட்ட சி.பி.ஐ. (மாவோயிஸ்ட்) அமைப்பின் தண்டகாரண்ய சிறப்பு மண்டல கமிட்டி உறுப்பினரான பிரபாகர்ராவ் என்ற பால்முரி நாராயண் ராவ், நேற்று கான்கர் மாவட்டம் அன்டகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பிடிபட்டார். அவரது தலைக்கு 25 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் பள்ளிகளாக இருந்தாலும், வழிபாட்டு தலங்களாக இருந்தாலும் இரக்கம் காட்ட முடியாது என சென்னை ஐகோர்ட்டு கூறி உள்ளது.
வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை தங்கள் நாட்டுக்கு திரும்ப அனுப்ப வேண்டும் என்று வங்காளதேச அரசு தெரிவித்துள்ளது. வங்காளதேசத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக ஷேக் ஹசீனா தற்போது இந்தியாவில் தஞ்சம் புகுந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய மனித உரிமை ஆணைய தலைவராக, ஓய்வுபெற்ற நீதிபதி ராமசுப்பிரமணியம் நியமிக்கப்பட்டு உள்ளார். தமிழகத்தை சேர்ந்த இவர் சென்னை ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றியவர் ஆவார்.
ஜெய்சங்கர் அமெரிக்கா செல்கிறார்
மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் 24-ம்தேதி முதல் 29-ம் தேதிவரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின்போது, இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள், பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்து அமெரிக்க மந்திரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.