நெல்லையில் கடந்த 8 மாதங்களில் 28 பேர் கொலை - குற்றங்களை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு

கடைசியாக கே.டி.சி. நகரில் நடந்த கவின் ஆணவக்கொலை தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.;

Update:2025-08-11 05:17 IST

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் சமீப காலமாக கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மாதம் 2 அல்லது 3 கொலைகள் அரங்கேறி வருகின்றன. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டாலும் கூட, கொலை சம்பவங்களை போலீசார் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறார்கள்.

கடந்த ஆண்டு நெல்லை மாவட்டத்தில் 35-க்கும் மேற்பட்ட கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த ஆண்டு 8 மாதங்களில் 17 பேர் கொலை செய்யப்பட்டு உள்ளனர். இதில் வள்ளியூர் உட்கோட்டத்தில் மட்டும் 6-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்து உள்ளன.

சமீபத்தில் ராதாபுரம் பகுதியில் பிரபுதாஸ் என்ற வாலிபர் கொலை செய்யப்பட்டார். இதற்கு முன்பாக அவரை காரை வைத்து மோதி கொலை செய்ய முயன்றதாகவும், அப்போதே போலீசார் குற்றவாளிகளை கைது செய்து இருந்தால் பிரபுதாஸ் தற்போது உயிருடன் இருந்து இருப்பார் என்றும் அவருடைய குடும்பத்தினர் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

நெல்லை மாநகரில் கடந்த 8 மாதங்களில் 11 பேர் கொலை செய்யப்பட்டு உள்ளனர். இதில் கடைசியாக கே.டி.சி. நகரில் நடந்த கவின் ஆணவக்கொலை தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து போலீசாா் கூறுகையில், ‘‘அதிகமான கொலைகள் இருதரப்பினர் இடையே ஏற்படும் திடீர் மோதல்களால் நிகழ்ந்துள்ளன. முன்விரோதம், பழிக்குப்பழியாக கொலைகள் நடக்கவில்லை. நடக்க இருந்த கொலைகள் பல தடுக்கப்பட்டு உள்ளன. குற்றவாளிகள் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் கொலை சம்பவங்கள் குறைந்துள்ளன’’ என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்