சேலம் அருகே கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து 3 பேர் உயிரிழப்பு
சுவாமி திருக்கல்யாணத்திற்காக பூசாரிப்பட்டி பகுதியில் இருந்து திருமண சீர்வரிசை எடுத்து சென்ற போது பட்டாசு வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.;
சேலம்,
சேலம் மாவட்டம் ஓமலூர் பூசாரிப்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி திரவுபதி அம்மன் கோவில் திருவிழா நடந்தது. இதனை முன்னிட்டு பட்டாசு மூட்டையை டூவிலரில் கொண்டு சென்றனர். வழியில், குப்பை எரிந்து கொண்டு இருந்தது.அந்த வழியாக சென்ற டூவிலர் கட்டுப்பாட்டை இழந்து அதில் விழுந்தது. இதில் பட்டாசுகள் தீப்பிடித்து வெடித்து சிதறின். இச்சம்பவத்தில், கஞ்சநாயக்கன்பட்டி கோட்டை மேட்டை சேர்ந்த செல்வராஜ்(29) மற்றும் அடையாளம் தெரியாத இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தங்கராஜ் என்பவரது மகன் லோகேஷ் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். பட்டாசு வெடித்து திருவிழா சமயத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவத்தால் கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது. இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சுவாமி திருக்கல்யாணத்திற்காக பூசாரிப்பட்டி பகுதியில் இருந்து திருமண சீர்வரிசை எடுத்து சென்ற போது பட்டாசு வெடித்து விபத்து ஏற்பட்டதும், அதில் 3 பேர் பலியானதும் தெரிந்தது. இந்த சம்பவம் தொடர்பாக ஓமலூர் டிஎஸ்பி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.