நெல்லையில் கஞ்சா விற்பனை வழக்கில் 6 பேர் குண்டர் சட்டத்தில் கைது
நெல்லை மாநகரில் 6 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டனர்.;
திருநெல்வேலி மாநகர பகுதியில் கஞ்சா, போதை பொருள் விற்பனை வழக்கில் எதிர்மறை கண்காணிப்பிற்கு வந்து, பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதார பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் பின்வரும் நபர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இதனையடுத்து திருநெல்வேலி மாநகர போலீஸ் துணை கமிஷனர் (கிழக்கு) வினோத் சாந்தாராம், போலீஸ் உதவி கமிஷனர் (பாளையங்கோட்டை சரகம்) சுரேஷ், பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) காசிப்பாண்டியன் ஆகியோரின் பரிந்துரையின்பேரில் திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி அந்த நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அவரது உத்தரவுப்படி திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம் மகன் சுரேஷ் (வயது 39), இசக்கி மகன் சீனிமாரியப்பன்(33), திருநெல்வேலி டவுணைச் சேர்ந்த வேலாயுதம் மகன்கள் லெட்சுமணன்(37), ஆறுமுகநயினார்(39), பேட்டையைச் சேர்ந்த முஸ்தபா மகன் அப்துல்காதர்(31), திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து, சங்கர்நகரைச் சேர்ந்த தளவாய் மகன் செல்வம்(41) ஆகிய 6 பேரும் இன்று (5.6.2025) குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டனர்.