திருவள்ளூரில் சட்ட விரோதமாக தங்கி இருந்த 8 வங்காளதேசத்தினர் கைது
முறையான ஆவணங்கள் இல்லாமல் இந்திய நாட்டு எல்லைக்குள் நுழைந்து இங்கு தங்கி இருந்தது தெரியவந்தது.;
கோப்புப்படம்
திருவள்ளூர்,
காஷ்மீர், பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைளை இந்தியா தீவிரப்படுத்தி உள்ளது. மேலும் இந்தியாவில் தங்கி இருந்த பாகிஸ்தானியர்கள் வெளியேறவும் உத்தரவிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து தமிழகத்திலும் தங்கி இருந்த பாகிஸ்தானியர்கள் விபரங்கள் சேகரிக்கப்பட்டு 200-க்கும் மேற்பட்டோர் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்த விசாரணையின் போது அனுமதியின்றி தங்கி இருக்கும் வங்காளதேசத்தினர் பற்றிய கண்காணிப்பு மற்றும் விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தினர்.
இதில் நசரத்பேட்டை பகுதியில் அண்ணா தெரு, அகரமேல் பகுதியில் அனுமதியின்றி சட்ட விரோதமாக தங்கி இருந்த வங்காளதேச நாட்டை சேர்ந்த முகமது முகுல், குல்சுன் அக்தர், சலாம். போகுல் பேகம், இப்ராகிம், முகமது மிஜானூர் ரகுமான்மிது, முகமது மரூப், முகமது பஷ்லுல் ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் 6 பேர் ஆண்கள், 2 பேர் பெண்கள் ஆவர்.
அவர்கள் முறையான ஆவணங்கள் இல்லாமல் இந்திய நாட்டு எல்லைக்குள் நுழைந்து இங்கு தங்கி இருந்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர்கள் 8 பேரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.