உயரிய இடத்தில் இருக்கும் கவர்னர் வஞ்சிக்கும் வார்த்தைகளை பேசக்கூடாது - அமைச்சர் அன்பில் மகேஸ்

உயரிய இடத்தில் இருந்து கொண்டு மாணவர்கள், ஆசிரியர்களை வஞ்சிக்கும் வார்த்தைகளை கவர்னர் பேசக்கூடாது என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.;

Update:2025-08-16 09:18 IST

கோப்புப்படம் 

தமிழ்நாடு பாரத சாரண-சாரணியர் இயக்க வளாகத்தில் நடந்த சுதந்திர தினவிழாவில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

2019-ம் ஆண்டில் இருந்து வழங்கப்படாமல் இருந்த ராஜ்ஜிய புரஸ்கார் விருது தற்போது வழங்க அனுமதி பெறப்பட்டு இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் 75 ஆயிரம் மாணவர்களுக்கு நவம்பர் 7-ந்தேதி வழங்க திட்டமிட்டுள்ளோம்.

ஒவ்வொரு சுதந்திர தினவிழாவின்போதும் கவர்னர் ஏதாவது சொல்கிறார். தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக ஒரு துறை வளர்ச்சி என்று இல்லாமல், எல்லா துறையும் வளர்ச்சியாக இருக்கிறது. அது பொருளாதாரம், சுகாதாரம், கல்வி என எதுவாக இருந்தாலும் அது சார்ந்த வளர்ச்சியாகத்தான் கொண்டு செல்கிறோம்.

கல்வியில் மாணவர்கள் எப்படி சாதித்து வருகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். யாரோ சொல்லும் அறிக்கையை வைத்து கொண்டு எப்போது பார்த்தாலும் தமிழ்நாட்டின் கல்வியை பற்றி குறை சொல்லும் வேலையைத்தான் கவர்னர் செய்து கொண்டு இருக்கிறார்.

எல்லா விதத்திலும் வளர்ச்சி, முன்னேற்ற பாதையை நோக்கி செல்லும்போது ஏதாவது குறை சொல்ல வேண்டும் என்பதற்காக கவர்னர் கூறுகிறார். உயரிய இடத்தில் இருந்து கொண்டு மாணவர்கள், ஆசிரியர்கள் பற்றி இதுபோன்ற வஞ்சிக்கும் வார்த்தைகளை பேசக்கூடாது. கவர்னர் சொல்லும் வார்த்தைகள் ஆசிரியர்கள், மாணவர்களை மனதளவில் பாதிப்படைய செய்யும். கவர்னர் சுதந்திர தின வாழ்த்தில் கல்வி கட்டமைப்பில் ஒட்டுமொத்தமாக பிற மாநிலங்கள் பொறாமைப்படும் அளவுக்கு இருப்பதாக பாராட்டிவிட்டு, கடைசியாக அதில் கொஞ்சம் விஷத்தையும் வைக்கும் வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்