குடிக்க தண்ணீர் கேட்பதுபோல நடித்து வீடு புகுந்து திருடிய ஆசாமி கைது

தண்ணீர் எடுக்க சென்றபோது, பூஜை அறையில் இருந்த வெள்ளி பொருட்களை மூட்டையாக கட்டி கொண்டு அந்த நபர் தப்பி சென்றுவிட்டார்.;

Update:2025-11-17 01:09 IST

கோப்புப்படம் 

சென்னை மயிலாப்பூர், கேசவ பெருமாள் மேற்கு தெருவை சேர்ந்தவர் கல்பகம் (77 வயது). இவரது கணவர் பெயர் தர்மராஜன் (83 வயது). இவர்கள் தனியாக வசித்து வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கல்பகம் அருகில் கோவிலுக்கு சென்றுவிட்டார். வீட்டில் தர்மராஜன் மட்டும் தனியாக இருந்தார்.

அப்போது மர்மநபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து ‘தாகமாக இருக்கிறது குடிக்க தண்ணீர் தாருங்கள்' என்று கேட்டார். அதை உண்மை என்று நம்பிய தர்மராஜன் சமையல் அறைக்கு தண்ணீர் எடுக்க சென்றார். அந்த சமயத்தில் வீட்டில் புகுந்த மர்ம நபர் பீரோவை திறந்து பணம், நகை ஏதும் இருக்கிறதா? என பார்த்துள்ளார். எதுவும் சிக்கவில்லை. உடனே பூஜை அறைக்கு சென்று அங்கிருந்த வெள்ளி குத்துவிளக்கு, வெள்ளி செம்பு போன்ற பூஜை பொருட்களை மூட்டையாக கட்டி கொண்ட அந்த நபர் தப்பி சென்றுவிட்டார்.

தண்ணீருடன் வந்த தர்மராஜன், தண்ணீர் கேட்ட நபரை தேடினார். அவரை காணவில்லை. பூஜை அறையில் இருந்த பொருட்களையும் காணவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பொருட்களை திருடி சென்ற மர்ம நபரை அடையாளம் கண்டு கைது செய்தனர். கைதான ஆசாமியின் பெயர் முத்து (49 வயது) ஆகும். கைதான முத்து மீது 9 திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்