மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவுகளை வீசிய மர்ம கும்பல்... திண்டுக்கல்லில் பரபரப்பு
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் பக்கவாட்டில் மனித கழிவுகள் வீசப்பட்டு இருந்தது.;
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே தொட்டணம்பட்டியில், கரட்டுப்பட்டி சாலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு வருகிறது. ஏறக்குறைய 90 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்டன. சிமெண்டு பூச்சுகள் பூசும் பணி நடந்து வந்தது. மேலும் தொட்டியின் மேல்பகுதியில் சிமெண்டு சிலாப்புகள் மட்டும் அமைக்கப்படாமல் இருந்தது.
இந்தநிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வழக்கம்போல் கட்டுமான தொழிலாளர்கள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு சென்றனர். மேலே ஏறி அவர்கள் பார்த்தபோது, தண்ணீர் தொட்டியின் உட்புறம் மதுபாட்டில், சிகரெட் பாக்கெட், பிளாஸ்டிக் டம்ளர் உள்ளிட்டவை கிடந்தது. மேலும் தொட்டியின் பக்கவாட்டில் மனித கழிவுகள் வீசப்பட்டு இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள், இதுகுறித்து எரியோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து, தண்ணீர் தொட்டியில் ஏறி பார்வையிட்டனர். பின்னர் தண்ணீர் தொட்டி மீது வீசப்பட்ட மனித கழிவுகள் அகற்றப்பட்டன. சம்பவத்தன்று இரவு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறிய மர்மகும்பல் முதலில் மது குடித்துள்ளது. அதன்பிறகு தொட்டிக்குள் மனித கழிவுகளை வீசிச்சென்றிருக்கலாம் என்று போலீசார் தரப்பில் கூறப்பட்டது.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்மகும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இருப்பினும் அந்த கும்பல் இதுவரை சிக்கவில்லை. இதையடுத்து கலெக்டர் உத்தரவின்பேரில் போலீஸ், வருவாய் மற்றும் உள்ளாட்சி துறை அதிகாரிகள் இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.