மாமியார் திட்டியதால் மனமுடைந்த ஆசிரியை.. விபரீத முடிவு எடுத்ததால் அதிர்ச்சி
வீட்டு வேலைகளை ஒழுங்காக செய்யவில்லை என்று அவரது மாமியார் சத்தம் போட்டு திட்டியதாக கூறப்படுகிறது.;
கன்னியாகுமரி,
குமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தைச் சேர்ந்தவர் மகேஷ் (வயது34). இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் மும்பையில் கால் சென்டரில் வேலை பார்த்த போது அவருடன் வேலை பார்த்த மராட்டியத்தை சேர்ந்த லேகா (32) என்பவரை காதலித்தார். பின்னர் அவரை ஊருக்கு அழைத்து வந்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்தநிலையில் மகேஷ் சத்தீஸ்காரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சென்று விட்டார். இதையடுத்து லேகா, கணவர் வீட்டில் தங்கியிருந்து அருகில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். அவருடன் கணவரின் தாயாரும் தங்கியிருந்தார்.
இந்தநிலையில் லேகா வீட்டு வேலைகளை ஒழுங்காக செய்யவில்லை என்று அவரது மாமியார் சத்தம் போட்டு திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் நேற்றுமுன்தினம் இரவு 8 மணி அளவில் வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் அஞ்சுகிராமம் போலீசார் விரைந்து வந்து லேகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக அஞ்சுகிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.