அமெரிக்காவின் சர்வாதிகாரப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது - இந்திய கம்யூ. கட்சி

உற்பத்திப் பொருள்களை வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான முயற்சிகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று மு.வீரபாண்டியன் கூறியுள்ளார்.;

Update:2026-01-09 16:21 IST

கோப்புப்படம் 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

இந்தியா எரிபொருள் தேவைக்காக ரஷியாவிடமிருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய்யை வாங்குகிறது என்பதை காரணமாகக் காட்டி, இந்தியா மீதும், அதே போன்று சீனா மீதும் 500 சதவீதம் வரி விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா நேற்று முன்தினம் (07.01.2026) அமெரிக்க நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரஷியா பொருளாதாரத் தடைச் சட்டம் 2025 என்ற பெயரிலான மசோதா அமெரிக்க அரசின் தலைவர் டொனால்டு டிரம்ப் ஒப்புதலுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மசோதா சட்டமானால் இந்தியாவுக்கு மிகப் பெரும் பாதிப்பு ஏற்படும். ஏற்கெனவே 50 சதவீத வரியை இந்தியா மீது டொனால்டு டிரம்ப் விதித்துள்ளார். இதன் காரணமாக இந்திய ஜவுளித்துறை உட்பட பல்வேறு துறைகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. திருப்பூர் ஜவுளி ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தியா மீது 500 சதவீதம் வரி விதித்தால் இந்திய ஏற்றுமதி வணிகம் கடுமையாக பாதிக்கப்படும். இந்தியாவின் இறையாண்மைக்கும், ஏற்றுமதி - இறக்குமதி கொள்கைகளுக்கும் எதிராக செயல்படும், அமெரிக்காவின் சர்வாதிகாரப்போக்கு, அரசியல், பொருளாதார மேலாதிக்கப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

அமெரிக்காவின் மிரட்டல்களுக்கு அடிபணியாமல், மத்திய பாஜக அரசு உரிய எதிர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்தியாவின் ஏற்றுமதியையும், பொருளாதாரத்தையும் பாதுகாக்க இதர நாடுகளுடன், பரஸ்பர உதவி மற்றும் நன்மை பயக்கும் வகையிலான பொருளாதார உறவுகளை, ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும்.

அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகும் உற்பத்திப் பொருள்களை வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டுமென, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, மத்திய பாஜக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்