கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பலாத்கார வழக்கு: 200 பக்க கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்
கல்லூரி மாணவி கூட்டு பலாத்கார வழக்கு கூடுதல் மகளிர் கோர்ட்டில் இருந்து மகளிர் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது.;
கோவை,
கோவை சித்ரா சர்வதேச விமான நிலையம் பின்புறம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2-ந் தேதி இரவு மதுரையை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி 3 வாலிபர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்த சகோதரர்கள் சதீஷ் என்ற கருப்பசாமி, அவருடைய தம்பி காளி என்ற காளீஸ்வரன், உறவினர் மதுரை மாவட்டம் கருப்பாயூரணியை சேர்ந்த குணா என்ற தவசி ஆகியோர் துடியலூரில் பதுங்கி இருந்த போது போலீசாரால் காலில் சுட்டுப்பிடிக்கப்பட்டனர்.
கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து 3 பேரும் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வழக்கு விசாரணை கூடுதல் மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. நீதிபதி சிந்து முன்னிலையில் கடந்த மாதம் 2-ந் தேதி முதற்கட்டமாக 50 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே வழக்கு விசாரணையானது கூடுதல் மகளிர் கோர்ட்டில் இருந்து மகளிர் கோர்ட்டுக்கு மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அதற்கான ஆவணங்கள் மாவட்ட கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த மாதம் 12-ந் தேதி மாவட்ட நீதிபதி விஜயா இந்த வழக்கை மகளிர் கோர்ட்டுக்கு மாற்றி உத்தரவிட்டார். கடந்த 2-ந் தேதி கைதான 3 பேரும் மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்தநிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. காவல்துறை தரப்பில் வழக்கில் கூடுதலாக 200 பக்க குற்றப்பத்திரிகை நீதிபதி சுந்தர்ராஜன் முன்பு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தர்ராஜ் வருகிற 19-ந் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்து உத்தரவிட்டார். வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுதொடர்பான விசாரணை மதுரையில் நடைபெற்றதால், அவர்கள் 3 பேரும் மதுரைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதனால் கோவை கோர்ட்டில் 3 பேரும் ஆஜர்படுத்தப்படவில்லை.