அன்புமணி பற்றிய பல உண்மைகள் எனக்கு தெரியும்: பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் பரபரப்பு பேட்டி
அன்புமணி என்னை சீண்ட வேண்டாம் என்று பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் கூறியுள்ளார்.;
சேலம்,
சேலம் வாழப்பாடியில் பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் மற்றும் அவருடைய ஆதரவாளர் சென்ற கார்கள் மீது இன்று திடீரென தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. அப்போது, ஆதரவாளர்கள் தடுக்க முயன்றபோது அவர்கள் மீதும் தாக்குதல் நடந்துள்ளது. பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ஆதரவாளராக எம்.எல்.ஏ. அருள் இருந்து வருகிறார்.
அவருக்கு ஆதரவாக அவ்வப்போது பேசியும், கருத்துகளை கூறியும் வருகிறார். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையே இணக்கமற்ற சூழல் காணப்படும் நிலையில், இந்த தாக்குதல் நடந்துள்ளது. தாக்குதலில் ஈடுபட்டவர்களை போலீசார் தடுக்க வந்தனர். அப்போது, தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கற்களை வீசினர். கட்டைகள், தடிகள் உள்ளிட்டவற்றை கொண்டும் தாக்கி உள்ளனர். இந்த சம்பவத்தில் 6 கார்கள் உடைக்கப்பட்டு உள்ளன. 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதுபற்றி பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் செய்தியாளர்களை சந்தித்து பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, சேலம் வாழப்பாடியில் எங்களை இடைமறித்து வாகனங்களை தாக்கினர். என் மீது நடந்த தாக்குதலுக்கு அன்புமணிதான் காரணம். அன்புமணி என்னை சீண்ட வேண்டாம். அவர் அடியாட்களை அனுப்பி தாக்க முயன்றது வருத்தமளிக்கிறது. அன்புமணி பற்றிய பல உண்மைகள் எனக்கு தெரியும் என்று கூறினார்.
அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி கூறும்போது, என்னுடைய ஆதரவாளர் கார் மீது தாக்குதல் நடந்துள்ளது. என்னை, இருவர் கத்தியால் கொல்ல முயன்றனர். கட்டை, கத்தி மற்றும் கம்பிகளை கொண்டு தாக்கினர். போலீசார் எனக்கு பாதுகாப்பு தருவார்கள் என நம்புகிறேன். நான் ஒரு எம்.எல்.ஏ. சட்டத்தின் மீது மதிப்பு வைத்திருக்கிறேன். நான் தவறு செய்தால் என்ன நடவடிக்கை வேண்டுமென்றாலும் எடுக்கலாம் என்று கூறியுள்ளார்.