முட்டை கேட்ட பள்ளி மாணவனை துடைப்பத்தால் தாக்கிய சத்துணவு ஊழியர்கள் கைது
சத்துணவில் முட்டை எங்கே என கேட்ட பள்ளி மாணவனை துடைப்பத்தால் தாக்கிய சத்துணவு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.;
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள செங்குணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஏராளாமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இப்பள்ளியில் நேற்று மதிய உணவின்போது மாணவர்களுக்கு முட்டை சரிவர வழங்கப்படவில்லை. அப்போது, 5ம் வகுப்பு மாணவன் தனக்கு முட்டை வேண்டும் என கூறியுள்ளான். அதற்கு சத்துணவு ஊழியர் முட்டை இல்லை என்று கூறியுள்ளார்.
இதையடுத்து அந்த மாணவன் சமையலறை சென்று பார்த்தபோது முட்டை இருந்துள்ளது. முட்டைகளை வைத்துக்கொண்டே ஏன் இல்லை என கூறுகிறீர்கள்? என்று மாணவன் கேள்வி எழுப்பியுள்ளான்.
இதனால் ஆத்திரமடைந்த சத்துணவு ஊழியர்களான சமையலர் லட்சுமி, உதவியாளர் முனியம்மாள் , "ஏன் சமையலறை சென்று பார்த்தாய்" எனக் கூறி அந்த மாணவனை வகுப்பறைக்குள் புகுந்து அங்கிருந்த துடைப்பத்தால் தாக்கினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான.
இதனை தொடர்ந்து முட்டை வழங்காதது குறித்து கேள்வி எழுப்பிய மாணவரை துடைப்பத்தால் தாக்கிய சமையலர் லட்சுமி மற்றும் உதவியாளர் முனியம்மாளை சஸ்பெண்ட் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டார். மேலும், அந்த பள்ளியை சேர்ந்த 2 ஆசிரியர்களை பணியிடமாற்றம் செய்தும் உத்தரவிட்டார்.
இந்நிலையில், சத்துணவில் முட்டை எங்கே என கேட்ட பள்ளி மாணவனை துடைப்பத்தால் தாக்கிய சத்துணவு ஊழியர்களான சமையலர் லட்சுமி மற்றும் உதவியாளர் முனியம்மாளை போளூர் போலீசார் கைது செய்துள்ளனர். குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.