பாஜக மூத்த தலைவர் இல.கணேசனின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் நேற்று இரவு மரணம் அடைந்தார்.;
நாகாலாந்து கவர்னராக இருந்தவர் இல.கணேசன். நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்த இல.கணேசன், கடந்த மாதம் சென்னை வந்தார். கால் பாதத்தில் ஏற்பட்ட புண் காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றார். உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால், வீடு திரும்பினார்.
கடந்த 5-ந்தேதி, கால் மரத்துப்போன நிலையில் வீட்டில் மயங்கி விழுந்த இல.கணேசனை, அவரது உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார். தொடர்ந்து கடந்த 8-ந் தேதி அதிகாலை 3 மணியளவில் அவருக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டது. எனவே அவரை சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் தலையில் ரத்தக்கட்டு இருப்பது கண்டறியப்பட்டது. அதற்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்தார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இல.கணேசன் நேற்று இரவு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 80. இதையடுத்து அவரது உடல், மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் தியாகராயநகரில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இதுபற்றிய தகவல் அறிந்த தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, தியாகராயநகரில் உள்ள இல.கணேசன் வீட்டுக்கு சென்று நேரில் அஞ்சலி செலுத்தினார். தியாகராயநகரில் உள்ள இல.கணேசன் வீட்டுக்கு சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இல.கணேசன் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
தியாகராயநகரில் வைக்கப்பட்டு இருந்த இல.கணேசன் உடலுக்கு பா.ஜனதா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர் எச்.ராஜா, வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., மாநில துணை தலைவர் சக்கரவத்தி, மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து கட்சியினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மறைந்த இல.கணேசனின் உடல் இன்று காலை அவரது வீட்டில் இருந்து, தியாகராயநகர் வெங்கட்நாராயண ரோட்டில் உள்ள கண்ணதாசன் மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. இதையடுத்து இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணியளவில் அவரது உடல், ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இல.கணேசன் உடலுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் மத்திய மந்திரிகள் இன்று நேரில் வந்து அஞ்சலி செலுத்துவார்கள் என்று கூறப்படுகிறது.
தஞ்சையில் பிறந்தவர்
மறைந்த இல.கணேசன் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர். 1945-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ந் தேதி இலக்குமிராகவன் -அலமேலு தம்பதியின் 9 பிள்ளைகளில் 7-வது மகனாகப் பிறந்தார். சிறுவயதில் தந்தையை இழந்ததால், தனது அண்ணன்கள் பராமரிப்பில் வளர்ந்தார். அந்த காலத்தில் எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்து இருந்த அவர் அரசு பணியில் சேர்ந்து பணியாற்றினார்.
அவருக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மீது தீவிர பற்று இருந்தது. 1970-ம் ஆண்டு பிப்ரவரி 16-ல் தனது அரசு வேலையை விட்டுவிட்டு, ஆர்.எஸ்.எஸ். முழு நேர ஊழியர் ஆனார். அதனால் திருமணமும் செய்து கொள்ளவில்லை.
இல.கணேசனும், பிரதமர் மோடியும் ஒரே கால கட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்.சில் இணைந்து பணியை தொடங்கியவர்கள். இல.கணேசன் தமிழ்நாட்டில் மாவட்டப் பொறுப்பாளராக இருந்தபோது, குஜராத்தில் மாவட்டப் பொறுப்பாளராக இருந்தார் மோடி. அடுத்து, இருவரும் மண்டலப் பொறுப்பாளர்கள் ஆனார்கள். இருவரும் பல கூட்டங்களில் ஒன்றாக இணைந்து பணியாற்றி இருக்கிறார்கள். பாரதிய ஜனதா கட்சியில் இல.கணேசன் செயற்குழு உறுப்பினர், தேசியச் செயலாளர், தேசிய துணைத் தலைவர், மாநிலத் தலைவர் உள்பட பல்வேறு பதவிகளில் இருந்தார்.
கவர்னர் பதவி
கடந்த 2009-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், இல.கணேசன் பாரதிய ஜனதா வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். பின்னர் மத்திய பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பதவி ஏற்றுக்கொண்டார்.
2021-ம் ஆண்டு மணிப்பூர் கவர்னராக நியமிக்கப்பட்டார். பின்னர் 2023-ம் ஆண்டு நாகாலாந்து கவர்னராக பொறுப்பேற்றார். 2022-ம் ஆண்டு மேற்கு வங்க கவர்னராக இருந்த தன்கர், துணை ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதால் சுமார் 4 மாத காலம் மேற்கு வங்க கவர்னர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்தார்.
தற்போது நாகாலாந்து கவர்னராக இருந்து வந்தார். இந்தநிலையில் இல.கணேசன் தனது 80 வயதில் சென்னையில் உயிரிழந்துள்ளார்.