சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியை தாக்க முயற்சி - திருமாவளவன் கண்டனம்
சனாதனத்தை வேரறுக்க ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரளுவது காலத்தின் தேவையாக உள்ளது என்று திருமாவளவன் கூறியுள்ளார்.;
கோப்புப்படம்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
சுப்ரீம் கோர்ட்டு வளாகத்திலேயே இந்திய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயை அவமதிக்கும் நோக்கில் அவரை நோக்கி செருப்பை வீசியுள்ள சனாதன வெறிபிடித்த வழக்கறிஞரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மிகவன்மையாகக் கண்டிக்கிறோம். அந்த நபரின் வழக்கறிஞர் தகுதியை உடனடியாக ரத்து செய்யவேண்டும். அத்துடன், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் அவரைக் கைது செய்து சிறைப்படுத்த வேண்டும்.
செருப்பை வீசும்போது 'சனாதன தருமத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது' என அந்நபர் கூச்சலிட்டதாகத் தெரிகிறது. இதிலிருந்து அவர் ஒரு சனாதன சங்கி என்பது உறுதியாகிறது.
புரட்சியாளர் அம்பேத்கரின் கொள்கைகளை உள்வாங்கியுள்ள ஜனநாயக சக்தியாக விளங்கும் தலைமை நீதிபதியின் மீது இங்ஙனம் வெறுப்பை உமிழ்வது இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான நடவடிக்கையே ஆகும். மேலும், ஒட்டுமொத்த நீதித்துறைக்கே நேர்ந்த அவமானமாகும்.
நாடெங்கிலும் சனாதனவெறியர்களின் கொட்டம் தலைவிரித்தாடுகிறது என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகவுள்ளது. இந்நிலையில், சனாதனத்தை வேரறுக்க ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரளுவது காலத்தின் தேவையாக உள்ளது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.