விடுமுறை கொடுக்க பணம்: ஆவடி பட்டாலியன் உதவி கமாண்டன்ட் சஸ்பெண்ட்

போலீசாருக்கு விடுமுறை கொடுக்க ரூ.2 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை பணம் வாங்கிய உதவி கமாண்டன்ட் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.;

Update:2025-03-30 06:40 IST

ஆவடி,

தமிழ்நாடு பேரிடர் மீட்பு துறையில் ரூ. 2 ஆயிரம் முதல் ரூ. 30 ஆயிரம் வரை G -pay மூலம் பணம் பெற்றுக்கொண்டு போலீசாருக்கு விடுமுறை கொடுத்த பட்டாலியன் உதவி கமாண்டன்ட் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை 13-வது பட்டாலியன் பிரிவில் உதவி கமாண்டன்ட்டாக (உதவி தளவாய்) பணியாற்றி வந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 57). கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவரான இவர், பட்டாலியனில் விடுமுறை, மருத்துவ விடுப்பு, பர்மிஷன் கேட்டு வரும் போலீசாரிடம் பணம் பெற்றதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இதுகுறித்து ஆயுதப்படை போலீசார் தரப்பில் உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றது. அதன் அடிப்படையில் ஆயுதப்படை கூடுதல் டி.ஜி.பி.ஜெயராம், இதுகுறித்து விசாரணை செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் விசாரணை நடத்திய அதிகாரிகள், முத்துகிருஷ்ணன் வங்கி கணக்குகளை ஆய்வு செய்தனர். அப்போது முத்துகிருஷ்ணன், போலீசாருக்கு விடுமுறை கொடுக்க அவர்களிடம் இருந்து ரூ.2 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை பணம் பெற்று முறைகேடுகளில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதற்காக அரசுக்கு போலீஸ் தரப்பில் பரிந்துரை செய்யப்பட்டது.

இந்தநிலையில் உதவி கமாண்டன்ட் முத்துகிருஷ்ணனை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. தற்போது முத்துகிருஷ்ணன், ஒரு மாதமாக விடுமுறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே முதல்-அமைச்சர் தனிப்பிரிவில் போலீசார் அளித்த புகாரின் பேரில் காவல்துறை டிஐஜி இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்