தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகள் அதிகரித்து வருகிறது: சென்னை ஐகோர்ட்டு வேதனை

தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகள் அதிகரித்து வருகிறது என்று சென்னை ஐகோர்ட்டு வேதனை தெரிவித்துள்ளது.;

Update:2025-08-05 06:47 IST

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், கடலூர் மாவட்டம், அரசகுழி கிராமத்தைச் சேர்ந்த எம்.முருகன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- விருத்தாசலத்தில் உள்ள கல்லூரியில் என் மகன் ஜெயசூர்யா (வயது 19) பி.காம் படித்து வந்தான். அதே கல்லூரியில் படித்த மாணவி ஒருவரை காதலித்துள்ளான். இந்த காதலுக்கு அந்த பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அந்த பெண்ணின் அக்காள் கணவர், என் மகனை பிடித்துச் சென்று காதலை கைவிடவில்லை என்றால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதே கல்லூரியில் அந்த பெண்ணின் உறவினரான பிரவீண் படிக்கிறார். இவரும், ஜீவன் என்ற மற்றொரு மாணவனும் என் மகனை கடந்த மே 18-ந்தேதி மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளனர்.

அவன் வீட்டுக்கு வராததால், இரவு 10 மணிக்கு போன் செய்து விசாரித்தேன். அப்போது, பிரவீண், ஜீவன் ஆகியோருடன் இருப்பதாக கூறினான். இதன்பின்னர் குள்ளஞ்சாவடி போலீசார் எனக்கு போன் செய்து, அதிகவேகமாக மோட்டார் சைக்கிளில் சென்று மின்கம்பத்தில் மோதியதில் என் மகன் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாக கூறினர். அந்த இடத்தில் என் மகன் படிக்கும் கல்லூரியில் பேராசிரியராக வேலை செய்யும் பரமசிவம் என்பவர்தான் காயம் அடைந்தவர்களை ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி வைத்ததாக கூறினர்.

விபத்து நடந்ததாக கூறப்படும் இடத்துக்கும், பரமசிவம் வீட்டுக்கும் 20 கிலோ மீட்டர் தூரம் ஆகும். எப்படி இரவில் அந்த இடத்துக்கு அவர் வந்தார், ஆம்புலன்சில் ஆஸ்பத்திரிக்கு ஏற்றி விட்டவர் ஏன் இந்த விபத்து குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்று பல சந்தேகம் உள்ளது. என் மகன் சாவில் மிகப்பெரிய சந்தேகம் உள்ளது. இது ஆணவக் கொலையாகும். எனவே, இந்த வழக்கை வேறு ஒரு புலன் விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகள் அதிகரித்து வருகிறது. துரதிஷ்டவசமாக இந்த ஆணவக் கொலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை. உண்மையிலேயே ஆணவக்கொலையாக இருந்தாலும் சில நேரங்களில் உண்மை வெளியே வருவதில்லை'' என்று வேதனை தெரிவித்தார்.

பின்னர், ஜெயசூர்யா மரணம் தொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றுகிறேன். வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் 2 வாரத்துக்குள் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம், குள்ளஞ்சாவடி போலீசார் ஒப்படைக்க வேண்டும். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேர்மையாக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்