டிடிவி தினகரனை நேரில் சந்தித்த அண்ணாமலை; பரபரக்கும் அரசியல் களம்
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.;
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், தேமுதிக , விசிக, மதிமுக, பாமக, தவெக உள்பட பல்வேறு கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தொடங்கி விட்டன. சட்டசபை தேர்தலில் அதிமுக, பாஜக இடையே கூட்டணி அமைந்துள்ளது.
அதேவேளை, டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருந்தது. ஆனால், சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு டிடிவி தினகரன் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்தார்.
இந்நிலையில், டிடிவி தினகரனை பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை நேற்று இரவு நேரில் சந்தித்தார். சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்திற்கு நேற்று இரவு அண்ணாமலை சென்றுள்ளார். அங்கு டிடிவி தினகரனும், அண்ணாமலையும் சுமார் ஒன்றரை மணி நேரம் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
இந்த ஆலோசனையின்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணையுமாறு டிடிவி தினகரனிடம், அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு இந்த சந்திப்பின்போது தினகரனிடம் அண்ணாமலை வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடந்த சில நாட்களுக்குமுன் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்தார். தற்போது டிடிவி தினகரனை அண்ணாமலை சந்தித்துள்ள நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.