தெலங்கானாவில் அடுத்த கல்வி ஆண்டு முதல் காலை உணவுத் திட்டம்: ரேவந்த் ரெட்டி அறிவிப்பு
தமிழக அரசின் திட்டங்களை நாடே பின்பற்றும் நிலை உருவாகி உள்ளது என்று தெலுங்கான முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி கூறினார்.;
சென்னை,
"கல்வியில் சிறந்த தமிழ்நாடு" விழாவில் தெலங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி பேசியதாவது:-
கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க எனக்கு அழைப்பு விடுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி. தமிழ்நாடு, கல்வி தந்தை காமராஜரின் மண். இந்த நிகழ்ச்சி தமிழக இளைஞர்களை மேலும் ஊக்கப்படுத்தும்.
தமிழ்நாட்டில் கல்வி வளர அடித்தளம் அமைத்தவர் பெருந்தலைவர் காமராஜர். கலைஞர் கருணாநிதியின் திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். சிறந்த முதல்-அமைச்சராக திகழும் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்.
கல்வி, ஊட்டச்சத்து, விளையாட்டில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. தமிழக அரசு திட்டங்களை நாடே பின்பற்றும் நிலை உருவாகி உள்ளது. மதிய உணவு திட்டத்தை முதன்முதலில் தொடங்கியது தமிழகம்தான். தமிழகத்தை தொடர்ந்து மற்ற மாநிலங்களிலும் மதிய உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது.
பள்ளி செல்லும் ஏழை குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் தமிழ்நாடு அரசின் காலை உணவுத் திட்டம் என்பது மனதை தொடும் திட்டம். தெலங்கானா மாநிலத்திலும் காலை உணவு திட்டம் அடுத்த கல்வி ஆண்டு முதல் செயல்படுத்தப்படும். அதைபோல தமிழகத்தில் உள்ள புதுமைப்பெண், நான் முதல்வன், தமிழ் புதல்வன் உள்ளிட்ட கல்வித் திட்டங்களும் வரும் கல்வி ஆண்டு முதல் தெலங்கானாவில் செயல்படுத்தப்படும்.
இந்தியர்கள் அனைவரும் தமிழகத்தின் கல்வி கொள்கையை உற்று நோக்குகின்றனர். தமிழ் மக்களும் தெலுங்கு மக்களும் நூற்றாண்டு காலங்கள் நட்புறவு கொண்டவர்கள். எனது மாநிலம் தெலுங்கானாவில் கல்விக்கு தான் முன்னுரிமை அளிக்கிறோம். கல்விதுறைக்கு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.