பட்டப்பகலில் துணிகரம்: போக்குவரத்துக்கழக பெண் அதிகாரியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
விழுப்புரத்தில் அரசு போக்குவரத்துக் கழக பெண் அதிகாரியிடம் 5 பவுன் சங்கிலியை முகமூடி அணிந்து பைக்கில் வந்த இருவர் பறித்துச் சென்றனர்.;
கோப்புப்படம்
விழுப்புரம் சாலாமேடு பகுதியை சேர்ந்தவர் ராமநாதன். இவர் விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி அமுதா (58 வயது). இவரும் அதே அரசு போக்குவரத்துக் கழகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அமுதா நேற்று காலை 8 மணி அளவில் காய்கறி வாங்குவதற்காக அதே பகுதியில் உள்ள கடைத்தெருவுக்கு சென்று விட்டு, மீண்டும் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக முகமூடி அணிந்து பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர் கண் இமைக்கும் நேரத்தில் அமுதா கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலி சங்கிலியை பறித்தனர். இதை சற்றும் எதிர்பாராத அமுதா திருடன்... திருடன்... என்று கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் அந்த மர்மநபர்கள் பைக்கில் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர். பறிபோன நகையின் மதிப்பு ரூ.4½ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து அமுதா விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைவரிசை காட்டிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.