பொறுப்பு டிஜிபி நியமனத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி
சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே யு.பி.எஸ்.சி.க்கு இது தொடர்பாக உத்தரவு பிறப்பித்துள்ளதால் நாங்கள் தலையிட விரும்பவில்லை என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.;
சென்னை,
தமிழக டிஜிபி-யாக பணிபுரிந்துவந்த சங்கர் ஜிவால் ஆகஸ்ட் 31ஆம் தேதி பணி ஓய்வு பெற்றதை அடுத்து பொறுப்பு டிஜிபி-யாக வெங்கட்ராமனை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது.
பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் வரதராஜ் என்பவர் சார்பில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை தலைமை நீதிபதி எம் எம் ஸ்ரீ வஸ்தவா, நீதிபதி அருள்முருகன் ஆகியோர் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
தற்காலிக அடிப்படையில் டிஜிபி நியமிக்க கூடாது என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமனை நியமித்தது சட்டவிரோதம் என்று வழக்கறிஞர் வரதராஜ் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
இதனையடுத்து தீர்ப்பு கூறிய நீதிபதிகள், இந்த வழக்கில் ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி டிஜிபி நியமனம் செய்யப்பட இருப்பதால், மேற்கொண்டு இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே யு.பி.எஸ்.சி.க்கு இது தொடர்பாக உத்தரவு பிறப்பித்துள்ளதால் நாங்கள் தலையிட விரும்பவில்லை. டிஜிபி பொறுப்பு காலியாக இருந்த நிலையில், பொறுப்பு டிஜிபி நியமனத்தை எதிர்த்து மனு தாக்கல் செய்ய முடியாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.