சென்னையை பாதுகாப்பான நகரமாக மாற்ற வேண்டும் - கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
சென்னை நகரத்தை பாதுகாப்பான நகரமாக மாற்ற வேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.;
ஸ்ரீபெரும்புதூர்,
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் அருகே பொடவூர் பகுதியில் உள்ள பிரம்ம குமாரிகள் மையத்தில் அகில இந்திய மாதர் சங்கத்தின் 93-ம் ஆண்டு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாதர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்று மாநாட்டை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி கூறியதாவது:-
பெண்கள் அனைத்து துறையிலும் இருக்க வேண்டும். தற்போது பெண்கள் பட்டம் பெறுகிறார்கள், தங்க பதக்கம் பெறுகிறார்கள். ஆனால் வேலை செய்யும் இடங்களில் பெண்களுக்கு இடம் குறைவாகவே உள்ளது. பட்டமளிப்பு விழா முடிந்த பிறகு தங்க பதக்கம் வென்ற மாணவிகளிடம் பேசுவேன். அப்போது பெண்கள் பலரும் கண்ணீருடன் நான் சென்னைக்கு சென்று படிக்க மாட்டேன் என கூறுவார்கள். சென்னைக்கு சென்று படிப்பது பாதுகாப்பில்லை என தங்கள் பெற்றோர்கள் கருதுவதாகவும், அந்த மாணவிகள் வேதனையுடன் தெரிவிப்பார்கள்.
இதுதான் தற்போது இருக்கக்கூடிய பிரச்சினை. சென்னை நகரத்தை பாதுகாப்பான நகரமாக மாற்ற வேண்டும். படித்த பெண்களுக்கும் பாதுகாப்பு குறைவாகவே உள்ளது' என்று கூறினார்.