7-ம் வகுப்பு மாணவனை கையை திருகி அடித்ததாக தலைமை ஆசிரியை மீது கலெக்டர் அலுவலகத்தில் புகார்

மாணவன் தனது தந்தையுடன் மதுரை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து தலைமை ஆசிரியை மீது புகார் அளித்தான்.;

Update:2025-08-26 08:01 IST


மதுரை கோரிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் தல்லாகுளம் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறான். 6-ம் வகுப்புவரை பழைய ஆயக்குடி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்த நிலையில் இந்த ஆண்டுதான் மாநகராட்சி பள்ளியில் 7-ம் வகுப்பு சேர்ந்தான்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை பள்ளிக்கு அந்த மாணவன் சீருடையில் செல்லவில்லையாம். அதனை பார்த்த தலைமை ஆசிரியை எதற்காக இதுபோன்று கலர் பேண்ட் அணிந்து வந்தாய் எனக்கூறி சத்தம் போட்டுள்ளார். பின்னர் அந்த மாணவனின் கையை பிடித்து திருகி அடித்ததாகவும், இதனால் மாணவனுக்கு கையில் தசை கிழிவு ஏற்பட்டு தற்போது கட்டு போடப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவன் தனது தந்தையுடன் மதுரை கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்து தலைமை ஆசிரியை மீது புகார் அளித்தான்.

இது குறித்து மாணவனின் தந்தை கூறும் போது, “எனது மகனுக்கு பள்ளியில் சீருடை வழங்கியபோது பேண்ட் அளவு சரியில்லை என கூறினேன். அதற்கு சட்டை மட்டும் கொடுத்துவிட்டு பேண்ட் வெளியில் எங்காவது வாங்கிக் கொள்ளுங்கள் என கூறிவிட்டனர். அதனால் எனது நண்பர் மூலமாக கிடைத்த சீருடை பேண்ட்டை அணிந்து பயன்படுத்தி வந்தான். சம்பவத்தன்று வேறு கலர் பேண்ட் அணிந்து சென்றதால் தலைமை ஆசிரியை திட்டி, கையை திருகி அடித்துள்ளார். இதனால் என் மகனுக்கு காயம் ஏற்பட்டு கட்டு போடும் நிலை ஏற்பட்டுள்ளது” என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்