தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகள்: வருவாய்த்துறை ஊழியர்கள் முழுமையாக புறக்கணிப்பு

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிக்கு திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.;

Update:2025-11-18 10:58 IST

சென்னை,

தமிழகத்தில் கடந்த 4-ந் தேதியில் இருந்து எஸ்.ஐ.ஆர். என்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு ஆளும் கட்சியான தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எஸ்.ஐ.ஆருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், அதிக பணி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகளை வருவாய்த்துறை ஊழியர்கள் முழுமையாக புறக்கணித்துள்ளனர். இதுதொடர்பாக பெரா என்ற வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு, பொதுத்தேர்தல் துறையின் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

Advertising
Advertising

எஸ்.ஐ.ஆர். பணியில் உள்ள வருவாய்த்துறை அலுவலர்களுக்கு உரிய கால அவகாசம் வழங்கப்படவில்லை. இரவு நேரங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள்களிலும், தொடர்ச்சியாக பணிபுரிய வேண்டுமென மாவட்ட கலெக்டர்களால் கடுமையான பணி நெருக்கடி ஏற்படுத்தப்படுகிறது. அதை களைய வேண்டும்.

இதுதொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரியை சந்தித்து விரிவான முறையீடு அளிக்கப்பட்டது. ஆய்வுக் கூட்டங்கள் என்ற பெயரில் அலுவலர்ளை வாட்டி வதைக்கும் கலெக்டர்களின் தன்னிச்சையான மனிதாபிமானமற்ற செயல்பாடுகளை கைவிட அறிவுறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. ஆனால் இந்த வாட்டி வதைப்பு மேலும் அதிகரித்துள்ளது.

இந்த பணியில் ஈடுபட்டுள்ள பல ஊழியர்களுக்கு உடல் நலம் மற்றும் மனநலம் சார்ந்த கடுமையான குறைபாடுகள் ஏற்பட்டுள்ளன. எனவே கூட்டமைப்பின் அவசர மாநில உயர்மட்டக் குழு கூட்டம் 16-ந் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இத்திட்டப் பணிகளில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வலியுறுத்தி அனைத்து மாவட்ட கலெக்டர்களிடமும் கூட்டமைப்பின் சார்பில் பெருந்திரள் முறையீடு அளிக்கப்படும். கோரிக்கைகள் நிறைவேறும் வரை இன்று முதல் எஸ்.ஐ.ஆர். தொடர்பான படிவங்கள் பெறுதல், இணையத்தில் பதிவேற்றம் செய்தல் உள்ளிட்ட வாக்காளர் பட்டியல் தொடர்புடைய அனைத்துப் பணிகளையும் முற்றாக புறக்கணிக்கப்படும்.

விண்ணப்பங்களை வாக்காளர்களுக்கு வழங்கி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெற்று தேர்தல் பிரிவில் ஒப்படைக்க 30 நாள்கள் கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளதால் அவசர கதியில் இப்பணியை முடிக்க கால நிர்ப்பந்தம் ஏற்படுத்தப்படுவதை கைவிட வேண்டும். 30 நாள்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால் அவசர கதியில் இப்பணியை முடித்திடுமாறு மாவட்ட கலெக்டர்கள் கடுமையான நிர்ப்பந்தம் ஏற்படுத்துவதை கைவிட வேண்டும்.

தினமும் 3 வேளைகளில் நள்ளிரவு வரை கூகுள் மீட் என்ற ஆய்வுக்கூட்டம் நடத்தி அலுவலர்களை வாட்டி வதைப்பதை நிறுத்த வேண்டும். சனி, ஞாயிறு உள்ளிட்ட அரசு விடுமுறை தினங்கள் உள்பட அனைத்து நாட்களிலும் இப்பணிகளை மேற்கொள்ள கலெக்டர்கள் கட்டாயப்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

இப்பணிகளை செம்மையாகவும், பிழையின்றியும் மேற்கொள்ள கூடுதல் கால அவகாசம் மற்றும் புதிய பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும். எஸ்.ஐ.ஆர். பணிகளில் இரவு-பகலாக ஈடுபட்டுள்ள அனைத்து அலுவலர்களுக்கும் ஒரு மாத ஊதியத்தை மதிப்பூதியமாக வழங்க வேண்டும். பணியில் உள்ள அனைத்து அலுவலர்களுக்கும் முறையான பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும்.

இந்தப் பணிகளால் வருவாய்த்துறை அலுவலர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். அவர்களின் உடல் நிலை, வயது, பணி மூப்பு ஆகிய எதையும் கருத்தில் கொள்ளாமல் எந்திரத்தனமாக நடத்திடும் செயல்பாடுகளால் அதிருப்தியுற்று, அலுவலர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கான மனநிலையை இத்திட்டம் ஏற்படுத்தியுள்ளது. எனவே அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உரிய அறிவுரைகளை வழங்கி சுமூகமான சூழலை ஏற்படுத்தி தரவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்