தமிழ் தெரியாததால் குழப்பம்: 'லிப்ட்' கேட்ட வடமாநில சிறுமியை வேறு பள்ளியில் இறக்கிவிட்ட பெண் - பெற்றோர் பீதி
பள்ளி முடிந்த பிறகுதான் சிறுமி வேறு பள்ளிக்கு மாறி வந்துள்ளார் என்ற விவரம் ஆசிரியர்களுக்கு தெரியவந்துள்ளது.;
காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் மாவட்டம் பூந்தமல்லி அருகே இரண்டாம் கட்டளை பகுதியில் வசித்து வரும் பீகார் மாநிலத்தை சேர்ந்த தம்பதியினர், அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். இந்த தம்பதியினர் சில நாட்களுக்கு முன்புதான் தங்கள் 7 வயது மகளை இரண்டாம் கட்டளையில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சேர்த்திருந்தனர்.
இந்நிலையில், நேற்று காலை பள்ளிக்கு புறப்பட்டுச் சென்ற சிறுமி, மாலை வீடு திரும்பவில்லை. இதையடுத்து பெற்றோர் பள்ளிக்கு சென்று விசாரித்தபோது, சிறுமிக்கு பள்ளிக்கு வராதது தெரிந்தது. இதனால் பீதியடைந்த பெற்றோர், சிறுமி கடத்தப்பட்டதாக நினைத்து குன்றத்தூர் போலீசாரிடம் புகார் அளித்தனர்.
இந்த புகாரின்பேரில் விசாரணை நடத்திய போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் சிறுமியை பெண் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அந்த வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து சம்பந்தப்பட்ட பெண்ணிடம் போலீசார் விசாரித்தனர்.
அப்போது சிறுமி 'லிப்ட்' கேட்டதால் ஏற்றி சென்றதாகவும், ஆனால் எந்த பள்ளி என்று சிறுமிக்கு கூற தெரியாததால் தண்டலத்தில் உள்ள அரசு பள்ளியில் விட்டதாகவும் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் தண்டலத்தில் உள்ள அரசு பள்ளிக்கு போலீசார் நேரில் சென்று பார்த்தபோது, பள்ளியின் தலைமை ஆசிரியர் அறையில் சிறுமி அமரவைக்கப்பட்டிருந்தார். அந்த சிறுமியை மீட்டு போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
மீட்கப்பட்ட சிறுமிக்கு தமிழ் பேச தெரியவில்லை. இந்தி மட்டுமே தெரிந்துள்ளது. இரண்டாம் கட்டளை பள்ளிக்கு பதிலாக தண்டலத்தில் உள்ள பள்ளியில் இறக்கி விட்டதால் என்ன செய்வதென்று தெரியாமல் அந்த பள்ளியில் உள்ள 1-ம் வகுப்பிற்கு சென்று அமர்ந்துள்ளார். தற்போது புதிய மாணவர்களின் சேர்க்கை நடைபெறுவதால் ஆசிரியர்கள் வருகை பதிவேட்டை எடுக்காமல் இருந்துள்ளனர்.
இந்த நிலையில், பள்ளி முடிந்த பிறகுதான் சிறுமி வேறு பள்ளிக்கு மாறி வந்துள்ளார் என்ற விவரம் ஆசிரியர்களுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து சிறுமியை தலைமை ஆசிரியர் அலுவலகத்தில் அமரவைத்துவிட்டு போலீசாருக்கு தகவல் கொடுக்க திட்டமிட்டுள்ளனர். அப்போதுதான் போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று சிறுமியை மீட்டுள்ளனர்.