தி.மு.க.விடம் கூடுதல் தொகுதிகள் கேட்டு அகல கைவிரிக்கும் காங்கிரஸ்: எத்தனை தொகுதிகள் தெரியுமா?
நடிகர் விஜய் கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி ரகசிய பேச்சு வார்த்தை நடத்துவதாக கூறப்பட்டு வருகிறது.;
சென்னை,
தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2026) ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலில் களம் காணும் அரசியல் கட்சிகளுக்கு இப்போதே தேர்தல் ஜுரம் அடிக்கத் தொடங்கிவிட்டது.
தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவ அதிகம் வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் சூழ்நிலையில், ஆளுங்கட்சியான தி.மு.க. வலுவான கூட்டணியுடன் களம் இறங்குகிறது. கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் (25 தொகுதிகள்), ம.தி.மு.க. (6), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு (6), இந்திய கம்யூனிஸ்டு (6), விடுதலை சிறுத்தைகள் கட்சி (6), மனிதநேய மக்கள் கட்சி (2), கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (3), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (3), தமிழக வாழ்வுரிமை கட்சி (1), மக்கள் விடுதலை கட்சி (1), ஆதித்தமிழர் பேரவை (1), அகில இந்திய பார்வர்டு பிளாக் (1) ஆகிய கட்சிகள் அங்கம் வகித்தன. அடைப்புக்குறிக்குள் உள்ள எண் கொண்ட தொகுதிகளில் போட்டியிட்டன.
தி.மு.க.வுக்கு தலைவலி
தற்போதைய தி.மு.க. கூட்டணியில் பெரிய அளவில் ஒன்றும் மாற்றம் இல்லை. தமிழக வாழ்வுரிமை கட்சி வெளியேறி இருக்கிறது. நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் உள்ளே வந்திருக்கிறது. கடந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த கொங்கு இளைஞர் பேரவையும் தி.மு.க. கூட்டணிக்கு மாற முயற்சி மேற்கொண்டு வருகிறது.
தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் அகில இந்திய கட்சியான காங்கிரஸ், கடந்த தேர்தலில் (2021) 25 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில், 18 இடங்களில் வெற்றி பெற்றது.
நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் புதிதாக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் களம் காண இருப்பதால், தேர்தல் களமே சற்று மாறியிருக்கிறது. தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் எல்லாம் இந்த முறை கூடுதல் தொகுதிகள் கேட்போம் என்று கூறிவருகின்றன. இது தி.மு.க.வுக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டணி பேச்சு வார்த்தைக்கு 5 பேர் குழு
ஏற்கனவே, அதிருப்தியில் உள்ள தி.மு.க. நிர்வாகிகள், "கடந்த முறை மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 173 தொகுதிகளில்தான் போட்டியிட்டோம். இந்த முறை கூடுதல் இடங்களில் போட்டியிட வேண்டும்" என்று கட்சி தலைமையிடம் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், கூட்டணி கட்சிகளோ கூடுதல் தொகுதிகளை கேட்டு வருகிறது.
நடிகர் விஜய் கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி ரகசிய பேச்சு வார்த்தை நடத்துவதாக கூறப்பட்டு வந்த நிலையில், திடீரென தொகுதி பங்கீடு குறித்து பேச 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது. அந்தக் குழுவில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மேலிட பொறுப்பாளர்கள் சூரஜ், எம்.என்.ஹெக்டே, நிவேதிக் ஆல்வா, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
40 தொகுதிகள் கேட்க முடிவு
கடந்த முறை 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் இந்த முறை சற்று அகல கையை விரித்து 40 தொகுதிகள் கேட்க முடிவு செய்துள்ளது. இந்த தகவலை கேள்விப்பட்ட தி.மு.க. தலைமை அதிருப்தி அடைந்துள்ளது.
காங்கிரஸ் கட்சியே இப்படி என்றால், மற்ற கட்சிகள் எல்லாம் எத்தனை தொகுதிகள் கேட்டு வருவார்களோ? என்று மனக்கணக்கு போட்டு வருகிறது. கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடிந்து, தொகுதிகளை அடையாளம் காணும் வரை தி.மு.க.வுக்கு தலைவலி ஏற்படும் சூழ்நிலையே நிலவுகிறது.