தங்க காசு தருவதாக கூறி சீட்டு பணம் வசூலித்து ரூ.8 கோடி மோசடி - தம்பதி கைது
போலியான சீட்டு நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.;
சென்னை,
சென்னை நெசப்பாக்கத்தை சேர்ந்த சத்தியசீலன்-சித்ரா தம்பதியினர் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடம் சீட்டுப் பணம் வசூலித்து வந்துள்ளனர். இவர்கள் சமீபத்தில் ‘தீபாவளி சீட்டு’ என்ற பெயரில் பணம் வசூலித்துள்ளனர். ஒவ்வொரு சீட்டுக்கும் 2 கிராம் தங்க காசு வழங்கப்படும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
இதனை நம்பி ஏராளமானோர் சீட்டுப் பணம் கட்டியுள்ளனர். இந்த நிலையில், சத்தியசீலன்-சித்ரா தம்பதி, தாங்கள் சொன்னபடி தங்க காசு தராமல் ரூ.8 கோடி பணத்தை மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி சத்தியசீலன்-சித்ரா தம்பதியை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
மேலும், இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட நபர்கள் புகார் அளிக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர். சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல் ஆய்வாளரை நேரில் சந்தித்து புகார் அளிக்க போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் போலியான சீட்டு நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என பொதுமக்களுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.