ஈரோடு: வாகனத்தில் சென்ற பயணிகளை புலி துரத்தியதா? - அரசு விளக்கம்
சத்தியமங்கலம் பண்ணாரி சாலையில் வாகனத்தில் சென்ற பயணிகளை புலி துரத்துவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.;
சென்னை,
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பண்ணாரி சாலையில் வாகனத்தில் சென்ற பயணிகளை புலி துரத்துவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்களை கடுமையான அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் இரவு நேரங்களில் வெளியே செல்வதை பெரும்பாலானோர் தவிர்த்துவருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:- இது முற்றிலும் தவறான தகவல். கடந்த அக்டோபர் மாதம் 5-ந்தேதி மராட்டிய மாநிலம் தடோபா அந்தரி புலிகள் சரணாலய வனப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகளை புலி ஒன்று துரத்தியுள்ளது. இந்த தகவலை தடோபா வனத்துறை உறுதி செய்துள்ளது. அப்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ சத்தியமங்கலம் என்று குறிப்பிட்டு பரப்பி வருகிறார்கள். வதந்திகளை நம்பவேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.