காதல் ஜோடியை மிரட்டி ‘கூகுள் பே' மூலம் பணம் பறிப்பு - 6 பேர் கைது
காதல் ஜோடியை மிரட்டி ‘கூகுள் பே' மூலம் பணம் பறித்து சென்ற 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.;
கோப்புப்படம்
சென்னையை அடுத்த வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் புவனேஸ்வரன் (23 வயது). இவர், மணிமங்கலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. காதலர்கள் இருவரும் மணிமங்கலம் கிராமத்தில் உள்ள கோவில் அருகே நின்று தனிமையில் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் புவனேஸ்வரனை மிரட்டியதாக தெரிகிறது. மேலும், காதல் ஜோடியை தாக்கி அவர்களிடம் இருந்து ரூ.17 ஆயிரம் பணத்தை ‘கூகுள் பே' மூலம் பண பரிவர்த்தனை செய்து கொண்டு அங்கிருந்து அந்த கும்பல் தப்பிச்சென்றது.
இது குறித்து மணிமங்கலம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி அந்த கும்பலை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் இது தொடர்பாக மணிமங்கலம் பகுதியை சேர்ந்த சதீஷ் (23 வயது), யோகேஷ்வரன் (22 வயது), அருண் (22 வயது), தயாநிதி (19 வயது) மற்றும் சிறுவர்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.