குரூப்-4 தேர்வை சரியாக எழுதவில்லை... மனஉளைச்சலில் வாலிபர் எடுத்த விபரீத முடிவு
செய்யாறு அருகே டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு எழுதிய வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
கோப்புப்படம்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே வெம்பாக்கம் தாலுகா தண்டப்பந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த தனசேகரன் என்பவரின் மகன் ஸ்ரீதர் (22 வயது). இவர் செய்யாறு அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்சி. முடித்துள்ளார். மேலும் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் போட்டி தேர்வு பயிற்சி மையத்தில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்காக படித்து வந்தார். இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த குரூப்-4 தேர்வை ஸ்ரீதர் எழுதினார்.
பின்னர் வீட்டுக்கு வந்த ஸ்ரீதர் தேர்வை சரியாக எழுதவில்லை என்று மனஉளைச்சலுடன் இருந்துள்ளார். இதனால் மனவிரக்தியில் இருந்த அவர் நேற்று முன்தினம் இரவு பெற்றோர் தூங்கிய பின்னர் அதிகாலை சுமார் 2 மணி அளவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மோரணம் போலீசார், ஶ்ரீதரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.