திண்டுக்கல்: தபால் அலுவலகத்தில் ரூ.52 லட்சம் கையாடல்- அஞ்சல் அலுவலர் கைது
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை, ஜி.தும்மலப்பட்டி கிளை தபால் அலுவலகத்தில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் அஞ்சல் அலுவலராக பணிபுரிந்து வந்தார்.;
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை, ஜி.தும்மலப்பட்டி கிளை தபால் அலுவலகத்தில் அஞ்சல் அலுவலராக அதே பகுதியை சேர்ந்த முனியாண்டி (வயது 59) பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இவர் மீது கையாடல் செய்திருப்பதாக புகார் எழுந்தது. தொடர்ந்து 2016 முதல் 2024 வரை உள்ள கணக்குகளை அதிகாரிகள் தணிக்கை செய்தபோது, செல்வமகள் சேமிப்புத்திட்டம், சேமிப்பு கணக்கு, நடப்பு கணக்கு உள்ளிட்ட திட்டங்களில் 87 வாடிக்கையாளர்களின் கணக்குகளில் இருந்து ரூ.52 லட்சத்து 5 ஆயிரத்து 650 கையாடல் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து முனியாண்டி சஸ்பெண்ட் செய்யப்பட்டதும், தலைமறைவானார். இதுகுறித்து மாவட்ட எஸ்.பி. பிரதீப்பிடம், அஞ்சல் ஆய்வாளர் பாண்டியராஜன் புகார் அளித்தார்.
அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. குமரேசன் தலைமையிலான போலீசார் தலைமறைவான முனியாண்டியை தேடினர். பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவில் உள்ள மர அறுவை மில்லில் கூலி வேலை செய்துவருவது தெரியவந்ததை தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், முனியாண்டியை கைது செய்து திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.