தமிழ்நாட்டில் 500 ஆண்டுகளுக்கு முன்பே தீபாவளி கொண்டாட்டம் - கல்வெட்டுகள் தரும் புதிய தகவல்கள்
தமிழ்நாட்டில் 500 ஆண்டுகளுக்கு முன்பே தீபாவளி கொண்டாட்டம் கல்வெட்டுகளில் தெரியவந்துள்ளன.;
விழுப்புரம்,
தீபாவளி குறித்த குறிப்பு திருப்பதி திருமலை கல்வெட்டில் இடம்பெற்றுள்ளது. தமிழர்கள் தீபாவளி கொண்டாடியதற்கான ஆதாரமாக இக்கல்வெட்டு அமைந்துள்ளது. அதேநேரம் காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில் கல்வெட்டுகளிலும் தீபாவளி குறித்து குறிப்பிடப்பட்டுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இதுபற்றி விழுப்புரத்தை சேர்ந்த வரலாற்று ஆர்வலர் செங்குட்டுவன் கூறியதாவது:-
கோவில் திருவிழாக்களை பட்டியலிடும் கிருஷ்ணதேவராயர் கல்வெட்டில் (கி.பி.1521) தீபாவளி இடம்பெற்றுள்ளது. மேலும் அச்சுதேவ மகாராயர் கால கல்வெட்டுகள் (கி.பி. 1533, 1537), சதாசிவ மகாராயர் (கி.பி. 1553) கல்வெட்டு மற்றும் ஆண்டு விவரம் அறிய இயலாத கல்வெட்டு ஒன்றிலும் தீபாவளி திருநாள், தீபாவளிநாள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் 504 ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டுள்ளது எனும் தகவல் நமக்கு கிடைத்துள்ளது. தீபாவளி குறித்து திருமலை திருப்பதி பெருமாள் கோவிலில் உள்ள கி.பி.1542-ம் ஆண்டு தமிழ் கல்வெட்டு மட்டுமே இதுவரை ஆதாரமாக இருந்து வந்தது.
தற்போது காஞ்சீபுரம் வரதராஜப்பெருமாள் கோவிலும் தீபாவளி குறித்த புதிய தகவலை நமக்கு தெரிவித்துள்ளது. இந்த தகவல்கள் கல்வெட்டு அறிஞர் தி.நா.சுப்பிரமணியன் தொகுத்து சென்னை அரசாங்க ஓலைச்சுவடி நிலையத்தின் சார்பில் 1953-ல் வெளியிடப்பட்ட தமிழ்நாட்டு கோவில் சாசனங்கள் நூலில் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.