தேர்தல் பணிகளை செய்ய முடியாத திமுக நிர்வாகிகள் ஒதுங்கி ஓய்வெடுங்கள்: அமைச்சர் மூர்த்தி கண்டிப்பு
சாக்கு, போக்கு சொல்வதற்கு இனி நேரமும் இல்லை, காலமும் இல்லை என்று அமைச்சர் மூர்த்தி கூறினார்.;
மதுரை,
மதுரை வடக்கு மாவட்ட திமுகவின் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் உத்தங்குடியில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்தில் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என்ற உறுதிமொழியை மாவட்ட செயலாளரும், அமைச்சருமான மூர்த்தி தலைமையில் தி.மு.க.வினர் எடுத்து கொண்டனர்.
பின்னர் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி பேசியதாவது:-
மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல்-அமைச்சரின் உத்தரவு படி மாவட்டத்தில் 10 தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெறுவதற்கு ஏற்ப கட்சியினர் பணியாற்ற வேண்டும். மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் 1,122 வாக்கு சாவடிகளில் உறுதிமொழி ஏற்க வேண்டும் என கூறப்பட்டது. சில வாக்கு சாவடிகளில் உறுதிமொழி நிகழ்வு நடத்தப்படவில்லை என தெரிகிறது.
திமுக தலைமைக்கழகம் சொல்லும் பணிகளை செய்ய முடியாத நிர்வாகிகள் கட்சியை விட்டு ஒதுங்கி ஓய்வு எடுத்து கொள்ளுங்கள். தேர்தல் பணிகள் செய்யாத நிர்வாகிகள் வகிக்கும் பதவிகளுக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள். சில நிர்வாகிகள் நாங்கள் என்ன அரசு வேலையா பார்க்கிறோம் எனக் கேட்டுள்ளனர்.
அரசு வேலை பார்க்க போகிறோம் என கேட்கும் நிர்வாகிகளை திமுகவை விட்டு விடுவிக்க தயாராக இருக்கிறோம். கட்சிப்பணியில் நிர்வாகிகள் சாக்கு, போக்கு சொல்வதற்கு இனி நேரமும் இல்லை, காலமும் இல்லை. தொகுதி பொறுப்பாளர்கள் சொல்லும் பணிகளை பூத் கமிட்டியினர் செய்ய வேண்டும். கரூரில் நடக்கும் திமுக முப்பெரும் விழாவில் வடக்கு மாவட்ட சார்பில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.