தி.மு.க. ஆட்சியில் புது கட்டிடங்களே இடிந்து விழும் அவலநிலை: ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை
தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.;
சென்னை,
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், மனித வாழ்க்கை வளம் பெறுவதற்கும், சமுதாய மேம்பாட்டிற்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் அடித்தளமாக விளங்குவது வற்றாத செல்வமாம் கல்வி என்பதை உணர்ந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கல்விக்காக அதிக நிதியை ஒதுக்கி, கல்வியின் தரத்திலும், உட்கட்டமைப்பிலும் இந்தியாவிலே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க வழிவகுக்கும் திட்டங்களை செயல்படுத்தினார்கள். ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேற்பட்ட தி.மு.க. ஆட்சியில் இதற்கு முற்றிலும் முரணான சூழ்நிலை நிலவுகிறது.
கடந்த நான்கு ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில், அரசு பள்ளிகளில் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வருவது ஒருபுறம் என்றால், மறுபுறம் மாணவ, மாணவியரின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடிய நிலையில் பள்ளி கட்டிடங்கள் உள்ளன. அரசு பள்ளிகளில் பழுதடைந்த கட்டுமானங்களை விரைந்து சீர் செய்ய வேண்டுமென்று நான் ஏற்கனவே எனது அறிக்கைகள் வாயிலாக தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தேன். பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அவர்களும் ஒவ்வொரு மாவட்டத்திலும் இடிந்து விழும் நிலையில் இருக்கும் பள்ளி கட்டிடங்கள், விரிசல் விழுந்துள்ள பள்ளி கட்டிடங்கள், செடிகள் வளர்ந்துள்ள பள்ளி கட்டிடங்கள் குறித்து விவரங்களை பெற்று, அதன் அடிப்படையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்திருந்தார்.
இதன் அடிப்படையில் புதிதாக பள்ளி கட்டிடங்கள் மற்றும் வகுப்பறைகள் கட்டப்பட்ட நிலையில், அந்த புதிய கட்டிடங்கள் மாணவ, மாணவியரின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியவையாக உள்ளன. ஒரு வாரத்திற்கு முன்பு, செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த புதுப்பட்டு நடுநிலைப்பள்ளியில் புதிதாக இரண்டு வகுப்பறைகள் கட்டப்பட்ட நிலையில், பயன்பாட்டிற்கு வந்த மூன்றே மாதத்தில் அந்த வகுப்பறையின் மேல் கூரை விழுந்து ஐந்து மாணவ, மாணவியர் படுகாயம் அடைந்து, மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வந்தது. தற்போது, ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் அருகே கூகலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை கட்டி முடிக்கப்பட்ட ஓர் ஆண்டிற்குள்ளேயே இடிந்து விழுந்துள்ளது. இதன்மூலம், தி.மு.க. ஆட்சியில் கட்டப்படும் கட்டிடங்கள் தரமற்றவை என்பது தெளிவாகிறது.
பழைய கட்டிடம் என்றால்கூட அதில் மேற்கூரைகள் ஏற்கெனவே சிதிலமடைந்து இருக்கும் என்பதையறிந்து அதற்கேற்ப மாணவ, மாணவியர் வகுப்பு அறையில் அமர வைக்கப்படுவர். அதே சமயத்தில், புதிய கட்டிடம் என்கிறபோது, மேற்கூரை ஏதும் விழாது என்ற உறுதி மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்களிடையே இருக்கும். இந்த உறுதியை குலைக்கும் வகையில், நடைபெற்று கொண்டிருக்கும் தி.மு.க. ஆட்சியில் புது கட்டிடங்களே இடிந்து விழும் அவலநிலை உருவாகி இருக்கிறது. அனைத்து புதிய கட்டிடங்களும் இதே நிலைமையில்தான் இருக்கின்றனவோ என்ற சந்தேகம் பெற்றோர்களிடையே தற்போது நிலவுகிறது. அந்த அளவுக்கு ஊழல் தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடுகிறது. ஆனால் முதல்-அமைச்சரோ திராவிட மாடல் ஆட்சி என்று விளம்பரப்படுத்தி கொண்டிருக்கிறார். ஒருவேளை, ஒரு சில மாதங்களிலேயே புதிய கட்டிடங்கள் இடிந்து விழுவதுதான் திராவிட மாடல் ஆட்சி போலும்!
முதல்-அமைச்சர் இதில் தனி கவனம் செலுத்தி, மேற்படி பள்ளிகளில் மேற்கூரை ஒரு சில மாதங்களில் இடிந்து விழுந்ததற்கு காரணமான ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், படுகாயமடைந்த மாணவ மாணவியருக்கு உயர் தர சிகிச்சை அளிக்க வேண்டுமென்றும், தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்கள் தரமானவையாக இருக்கின்றனவா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு கட்டிடங்களின் ஸ்திர தன்மையை உறுதி செய்ய வேண்டுமென்றும், அரசு பள்ளிகளில் மாணவ, மாணவியரின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில், ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, தரமான கட்டிடங்களை இனி வருங்காலங்களில் கட்ட வேண்டுமென்றும் அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.