பச்சைப்பொய் ஒன்று தான் தி.மு.க.வின் முதலீடு - அன்புமணி ராமதாஸ் காட்டம்

முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என 4 ஆண்டுகளாக பாமக வலியுறுத்தி வருவதாக அன்புமணி கூறினார்.;

Update:2025-08-30 13:50 IST

சென்னை,

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ரூ.10.62 லட்சம் கோடி முதலீடு திரட்டுவதற்கான 922 முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டிருப்பதாகவும், தாம் கையெழுத்திட்ட அனைத்து முதலீட்டு ஒப்பந்தங்களும் நடைமுறைக்கு வந்து விட்டதாகவும் முதல்-அச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். திமுக அரசு கையெழுத்திட்ட முதலீட்டு ஒப்பந்தங்களில் 10 சதவீதம் கூட நடைமுறைக்கு வராத நிலையில், அனைத்து முதலீடுகளும் நடைமுறைக்கு வந்து விட்டதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுவதை விட பச்சைப் பொய் எதுவும் இருக்க முடியாது.

தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்த்து வரப்போவதாகக் கூறி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு 9 நாள் பயணமாக சுற்றுலா சென்றிருக்கிறார். அதற்கு முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,‘‘திமுக ஆட்சிக்கு வந்த பின் ரூ.10 லட்சத்து 62 ஆயிரத்து 752 கோடி ரூபாய்க்கான முதலீடுகளை ஈர்த்து, 922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டிருக்கிறோம். இதன்மூலம் 32 லட்சத்து 81 ஆயிரத்து 32 பேருக்கு வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டிருக்கிறது’’ என்று தெரிவித்தார்.

தாம் கையெழுத்திட்ட அனைத்து ஒப்பந்தங்களும் செயல்பாட்டுக்கு வந்து விட்டதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். இவை அனைத்தும் அப்பட்டமான பொய்; பொய்யைத் தவிர வேறெதுவுமில்லை.

திமுக அரசின் ரூ.10 லட்சம் கோடி முதலீட்டுக் கதைகள் எந்த அளவுக்கு பொய்யானவை என்பதை கடந்த சில ஆண்டுகளில் பலமுறை பாட்டாளி மக்கள் கட்சி அம்பலப்படுத்தியிருக்கிறது. ஆனாலும், கோயபல்ஸ் கொள்கையை கடைபிடிக்கும் திமுக அரசும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் அதே பொய்யை மீண்டும், மீண்டும் கூறி வருகின்றனர். தமிழ்நாட்டு மக்கள் ஒரு போதும் இந்த பொய்யை நம்ப மாட்டார்கள்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலிலின் சிங்கப்பூர் பயணம் குறித்து கடந்த 20-ஆம் நாள் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கையெழுத்திடப்பட்ட தொழில் முதலீட்டு ஒப்பந்தங்களில் 77 சதவீதம் செயல்பாட்டுக்கு வந்து விட்டதாகவும், 2024 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்களில் 80 சதவீதம் செயல்பாட்டுக்கு வந்து விட்டதாகவும் தெரிவித்திருந்தார். அதன்பின் 10 நாள்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில், எவ்வாறு மீதமுள்ள 20 விழுக்காடு ஒப்பந்தங்களும் செயல்பாட்டுக்கு வந்தன? என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.

திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாகவும் திமுக அரசு இப்படித் தான் பொய்யுரைத்து வந்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது 80 சதவீதம் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டதாகக் கூறுவார். அடுத்த நிகழ்ச்சியில் 90 சதவீதம் என்று கூறுவார்; இப்போது 98 சதவீதம் என்று கூறி வருகிறார். அதேபோல் தான் இப்போது தொழில் முதலீடு தொடர்பான விவகாரங்களிலும் 77 சதவீதம், 80 சதவீதம், 100 சதவீதம் என்று முதல்-அமைச்சரும், அமைச்சர்களும் கதைகளை கூறி வருகிறார்கள். இவை அனைத்தும் அப்பட்டமான பொய் என்பதை வெகுவிரைவில் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்த பாட்டாளி மக்கள் கட்சி நடவடிக்கை எடுக்கும்.

தமிழ்நாட்டுக்கு வந்த முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என 4 ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. திமுக அரசுக்கு மடியில் கனமில்லை என்றால் அந்த விவரங்களை வெளியிட்டு, தாங்கள் ஈர்த்த முதலீடுகளின் அளவை நிரூபிக்கலாம். ஆனால், அதை திமுக அரசு செய்யாது. காரணம் பொய் மட்டும் தான் திமுகவின் முதலீடு. திமுகவின் இந்த மோசடிகள் வெகு விரைவில் அம்பலமாகும். அப்போது திமுக அரசை ஆட்சியிலிருந்து தமிழக மக்கள் விரட்டி அடிப்பார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்